சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் ஆண்டுக்கான முழு மத்திய பட்ஜெட் அறிக்கையை ஜூலை மாதம் 23 அல்லது 24 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
2025ஆம் நிதியாண்டுக்கான இந்த முழு பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்வது தொடர்ந்து ஏழாவது ஆண்டாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்து, புதிய வரலாற்று சாதனையை படைக்க உள்ளார்.

2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து மக்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு இருக்கும் வேளையில், பிளாஷ்பேக் பார்ப்பது மிகவும் முக்கியம். அதாவது 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு துறைகளில் சுங்க வரி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் விளைவாக சில பொருட்களின் விலை குறைந்தது, சில பொருட்களின் விலை உயர்ந்தது. இதை ஒரு ரவுண்டு பார்ப்போம் வாங்க.
விலை குறைந்த பொருட்கள்:
தொலைக்காட்சி: டிவி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஓபன் செல் பாகங்களுக்கான சுங்க வரி 5 சதவிகிதத்தில் இருந்து 2.5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக டிவி விலை கணிசமாக குறைந்தது.
மொபைல் போன்: உள்நாட்டில் மொபைல் போன் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் மொபைல் போன் பாகங்களுக்கான சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.
செயற்கை வைரங்கள்: செயற்கை வைரங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் விதைகளுக்கான அடிப்படை சுங்க வரி நீக்கப்பட்டது.
இறால்: இறால் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இறால் தீனிக்கு விதிக்கப்பட்ட சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.
விலை உயர்ந்த பொருட்கள்:
வெள்ளி: வெள்ளி இறக்குமதியின் மீதான அடிப்படை சுங்க வரி 10 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பிற வெள்ளிப் பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிகரெட்: தேசிய இயற்கை பேரிடர் நிவாரண வரி (NCCD) என்ற வரி 16 சதவிகிதம் கூடுதலாக விதிக்கப்பட்டதால் சிகரெட் விலை உயர்ந்தது.
கிட்சன் சிம்னி: வீட்டு சமையல் அறையில் புகை போக்கி இயந்திரங்களுக்கான சுங்க வரி 7.5 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.
ரப்பர்: இயற்கை ரப்பரின் மீது விதிக்கப்படும் சுங்க வரிக்கு இணையாக கலப்பட ரப்பரின் மீதான அடிப்படை சுங்க வரி 10 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதம் அல்லது கிலோவுக்கு ரூ.30 (எது குறைவோ அது) என உயர்த்தப்பட்டது.


Click it and Unblock the Notifications