நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட்டையும், தொடர்ந்து அவருடைய 7-வது பட்ஜெட்டையும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்து கொண்டிருக்கிறார். அவர் தனது உரையைத் தொடங்கும் போது, இந்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, MSME மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் முக்கிமானதாக இருக்கும் என்று கூறி தனது பட்ஜெட் உரையை ஆரம்பித்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் மூன்று புதிய திட்டங்களை அறிவித்தார். ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
திட்டம் 1: நிர்மலா சீதாராமன் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகையை அறிவித்திருக்கிறார். அதன் படி அனைத்து துறைகளிலும் புதிதாக வேலைக்குச் சேரும் நபர்களுக்கு ஒரு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை ரூ.15,000 வரை மூன்று தவணைகளாக வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கு தகுதிப் பெற மாத வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் 2.1 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

"அனைத்து துறைகளிலும் புதிதாக வேலைக்குச் சேரும் நபர்களுக்கு ஒரு மாத ஊக்கத்தொகை மற்றும் EPFO-வில் பதிவு செய்யப்பட்ட முதல் முறை பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளம் ரூ.15,000 வரை மூன்று தவணைகளாக வழங்கப்படும். தகுதிப் பெற மாத வருமானம் ரூ.1 லட்சமாக இருக்க வேண்டும்" என்று தனது பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
திட்டம் 2: இத்திட்டத்தின் நோக்கம், தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதாகும்.
இதன்படி, முதல் நான்கு ஆண்டுகளில் தொழிலாளி மற்றும் முதலாளியின் EPFO பங்களிப்பின் அடிப்படையில், இருவருக்கும் நேரடியாக ஒரு குறிப்பிட்ட அளவில் ஊக்கத்தொகை வழங்கப்படும். ரூ. 52,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டம் 3: இத்திட்டத்தின் நோக்கம் அனைத்துத் துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்புகளை ஊக்குவிப்பதாகும். இந்தத் திட்டத்தின் கீழ் பணியாளர்கள், EPFO-வில் புதிய உறுப்பினர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
முதலாளிகளை மையமாகக் கொண்ட இந்தத் திட்டம் ரூ.32,000 கோடி பட்ஜெட்டைக் கொண்டுள்ளது. மேலும் ரூ.50 லட்சம் நபர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications