புதுடெல்லி: மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் எந்த வரி மாற்றங்களும் அறிவிக்கப்படாத நிலையில், ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள முழு பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பு முறையை அதிகப்படியான மக்களுக்கு விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020-21ஆம் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி விதிப்பு முறையை எளிமையானதாக மாற்றும் நோக்கில் அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்த முறையை தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கு இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்றும் பொருட்டு, சில நடவடிக்கைகளை அரசு எடுக்கலாம்.

தற்போது ரூ.50,000 ஆக உள்ள தனிநபர் வரி விலக்கு தொகையை ரூ.1 லட்சமாக உயர்த்துவது, சுகாதார காப்பீட்டு பிரீமியம் (80D பிரிவு) தள்ளுபடியை புதிய வரி முறையில் சேர்த்துக்கொள்வது மூலம் அனைத்து தரப்பு மக்களும் போதுமான சுகாதார காப்பீடு எடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் தள்ளுபடி தொகையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு எடுக்கலாம்.
மேலும், 80CCD(2) பிரிவின் கீழ், ஓய்வூதிய திட்டமான தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) எம்பளாயர் பங்களிப்புக்கான தள்ளுபடி தொகையை தற்போதைய 10 சதவிகித அடிப்படை சம்பளத்தில் இருந்து 14 சதவிகிதமாக உயர்த்துவது இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி புதிய வரி விதிப்பு முறையின் கீழ் அதிகளவு வரி சேமிப்பிற்கான வாய்ப்பை வழங்கும் முயற்சியை மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அரசு பழைய வரி விதிப்பு முறையை தொடர்ந்தால், சில வரி விதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டியது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications