பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அடுத்த மாதம் 2024-25ஆம் ஆண்டுக்கான முழு மத்திய பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய சாதனையை படைக்க உள்ளார்.
நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதியமைச்சராக பதவியேற்றுத் தாக்கல் செய்யும் ஏழாவது பட்ஜெட் அறிக்கை இது. இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக ஏழு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்யும் முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற உள்ளார்.

இதுவரையில் இந்தியாவில் அதிகப்படியாகத் தொடர்ச்சியாக 6 பட்ஜெட் அறிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளார் முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய். தற்போது நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட் அறிக்கை மூலம் புதிய சாதனையைப் படைக்க உள்ளார்.
ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2024 அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.
மொரார்ஜி தேசாய்-ன் சாதனையை முறியடித்து, தொடர்ச்சியாக 7 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளது மட்டும் அல்லாமல் இதற்கு முன்பே சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
2014, 2019 மற்றும் 2024 என மோடியின் 3 ஆட்சியிலும் நிர்மலா சீதாராமன் முக்கிய மத்திய அமைச்சராக இருந்துள்ளார். தற்போது நிதியமைச்சராக மட்டும் அல்லாமல் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சராகவும் உள்ளார்.
7 முறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது மட்டும் அல்லாமல் நிர்மலா சீதாராமன் நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் இருந்தவர். இதேபோல் பாதுகாப்புத் துறை அமைச்சராக இந்திரா காந்திக்கு அடுத்தாக இப்பதவியில் இருந்த ஓரே பெண்மணி நிர்மலா சீதாராமன் தான்.
மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் ஐந்து முறை பட்ஜெட் தாக்கல் செய்த சாதனையை ஏற்கனவே நிர்மலா சீதாராமன் முறியடித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது ஆறாவது பட்ஜெட்-ஐ இடைக்கால பட்ஜெட் ஆக தாக்கல் செய்தார்.
மொரார்ஜி தேசாய், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, மொத்தம் பத்து பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த இந்திய நிதியமைச்சர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆனால் தொடர்ச்சியாக 6 முறை மட்டுமே தாக்கல் செய்துள்ளார். அவர் மார்ச் 24, 1977 முதல் ஜூலை 28, 1979 வரை இந்தியாவின் நான்காவது பிரதமராகவும் இருந்தார்.


Click it and Unblock the Notifications