பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்ததை தொடர்ந்து 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்கி, BJP சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஓம் பிர்லா மீண்டும் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து தினமும் நாடாளுமன்றத்தில் அனல் பறக்க விவாதம் நடந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி பருவகால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2024-25 நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை ஜூலை மாத இறுதியில், ஆகஸ்ட் 9ம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் எப்போது தாக்கல் செய்வார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை மதிப்பீடு செய்து, பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்வது வழக்கம். 2024ஆம் ஆண்டில், நடைபெற்ற மக்களவை தேர்தல் காரணமாக, பட்ஜெட் இரண்டு கட்டங்களாகத் தாக்கல் செய்யப்படுகிறது.
முதலில், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் அறிக்கை தேர்தல் முடியும் காலம் வரையில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, 3வது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசு பதவியேற்றுள்ள நிலையில், மீண்டும் நிதியமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
பட்ஜெட் 2024 எப்போது: ஜூலை 24ம் தேதி காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட முன்மொழிவு வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரையில் இறுதி தேதி அறிவிக்கப்படவில்லை. பொதுவாக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள், பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) தாக்கல் செய்யப்படும். இந்த வகையில் ஜூலை 23 ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட் உரை எங்கு காணலாம்?: நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனல்களான சன்சத் டிவி மற்றும் தூர்தர்ஷன், அவற்றின் யூடியூப் பக்கங்கள் வழியாக நேரடி ஒளிபரப்பாகும். இதுதவிர தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் உடனுக்குடன் பட்ஜெட் குறித்த விளக்கமான செய்திகளை மக்கள் பெற முடியும்.
டிஜிட்டல் பட்ஜெட்: மேலும், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கும் மத்திய அரசின் பட்ஜெட் இணையதளம் (www.indiabudget.gov.in) மூலமாகவும் பட்ஜெட் 2024 ஆவணங்களை டிஜிட்டலாக அணுகலாம். இந்த முறையும் மத்திய அரசு தனது பட்ஜெட்டை டிஜிட்டல் பட்ஜெட் ஆகவே தாக்கல் செய்கிறது.


Click it and Unblock the Notifications