மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைந்து தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இது.
இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அறிவிப்புகளை எதிர்பார்க்க வேண்டாம் என நிர்மலா சீதாராமன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இருப்பினும் இடைக்கால பட்ஜெட்டில் சில குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதற்கு ஆதரவாகவும் விமர்சனம் தெரிவித்தும் அரசியல் கட்சியினர், தொழில் துறையினர், துறை சார்ந்த வல்லுனர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஐடி துறையில் 25 ஆண்டு கால அனுபவம் கொண்ட ஜேப்பி குரியன், அரசின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளதோடு, டிஜிட்டல் துறையில் தனியாருடன் இணைந்து அரசு முதலீடு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
ஐடி வல்லுனர்களின் பார்வை:
ஜேப்பி குரியன், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். ஓரியன் இன்னோவேஷன் நிறுவனத்தின் இந்தியா பிரிவிற்கான சீனியர் வைஸ் பிரசிடெண்டாக தற்போது பணியில் இருக்கிறார்.
தகவல் தொழில்நுட்ப துறையில் 25 ஆண்டு கால அனுபவம் கொண்டவர். குறிப்பாக கிளவுட், உள்கட்டமைப்பு மற்றும் மென்பொருள்கள் மேலாண்மை சேவைகளில் கை தேர்ந்தவர். டெக் மகேந்திரா, இன்போசிஸ், விப்ரோ, கேப்ஜெமினி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அரசின் தொலை நோக்குப் பார்வைக்கு பாராட்டு:
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கான அரசின் தொலைநோக்குப் பார்வை மற்றும் பல்வேறு துறைகள், பிராந்தியங்களின் உள்ளடக்கிய வளர்ச்சியை அரசு இலக்காக கொண்டிருப்பதற்கும் அதற்காக எடுக்கும் முயற்சிகளுக்கும் ஜேப்பி குரியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பொருளாதார திட்டங்களுக்கு ஆதரவு:
டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசின் முயற்சிகள் மற்றும் திட்டங்களை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள அவர், தெரு வியாபாரிகளுக்கான பிரதமர் ஸ்வநிதி திட்டம், விவசாயிகளுக்கான பிரதமர் கிஷான் யோஜனா, பெண் தொழில் முனைவோருக்கான முத்ரா யோஜனா,டிஜிட்டல் இந்தியா திட்டம் , தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் மற்றும் தேசிய கல்விக் கொள்கை போன்ற திட்டங்களையும் பாராட்டியுள்ளார்.
இந்த முயற்சிகள் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்கள் டிஜிட்டல் சேவைகளை அனுபவிப்பர் இது மேலும் அவர்களுக்கு அதிகாரமளிக்கும் என கூறியுள்ளார்.
அரசுக்கு பரிந்துரை:
இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், டிஜிட்டல் கல்வி அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துதல், புது கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவித்தல், தரவு பாதுகாப்பு போன்ற இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்த தனியார் துறையுடன் இணைந்து அரசு முதலீடு செய்ய வேண்டும் என்பதே தன்னை போன்றவர்களின் பரிந்துரை என கூறியுள்ளார்.
அரசின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் டிஜிட்டல் யுகத்தில் இந்தியா உலகளாவிய தலைவராக உருவெடுக்க முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications