டெல்லி: மத்திய நிதி பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாக கூடும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வு, பண வீக்கம் உள்ளிட்ட காரணங்களால் சாமானிய மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு சாமானிய மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கக்கூடிய, குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களுக்கு சாதகமான அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் வெளியிடுமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக வருமான வரி பிடித்தம் மற்றும் வரி விலக்கு ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நிலையான வரிக்கழிவு (Standard deduction)என்பது 50,000 ரூபாயாக இருக்கிறது.

ஆனால் தற்போதைய பொருளாதார நிலவரம் மற்றும் ஊதியம் பெரும் தனிநபர்களுக்கு இருக்கக்கூடிய நிதிச் சுமை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நிலையான கழிவை 50,000 ரூபாயில் இருந்து உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது.
தற்போதைய வருமான வரி பிடித்தம் நடைமுறைகளில் ஊதியம் பெறக்கூடிய அனைத்து தனி நபர்களுக்கும் நிலையான வரிக்கழிவு என 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த நிலையான கழிவு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறது. அதாவது இதனை 1 லட்சம் ரூபாயாக உயர்த்தினால் ஊதியம் பெரும் தனி நபர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
பொதுவாக ஊதியம் பெறும் தனி நபர்களுக்கு வருமான வரி கணக்கீடு செய்யும் போது அனைத்து பிடித்தங்களும் போக நேரடியாக நிலையான கழிவாக 50,000 ரூபாய் அவர்களது வருமானத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. இதற்காக அவர்கள் எந்த விதமான முதலீட்டு ஆதாரங்களையோ அல்லது கூடுதல் ஆவணங்களையோ வழங்க வேண்டியதில்லை.
தற்போது முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கக்கூடிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிலையான கழிவுகளின் அளவை அதிகரிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மருத்துவ செலவு ,எரிபொருள் செலவு என பல்வேறு தனிப்பட்ட செலவுகள் அதிகரித்துள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும் தற்போது இருக்கக்கூடிய வருமான வரி உச்ச வரம்பினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்கள் முன்வைக்கின்றனர். இதன் மூலம் தனிநபர்களின் வருமானம் அதிகரித்து அவர்கள் அதிகமாக செலவு செய்வார்கள் அல்லது அதிகமாக சேமிப்பார்கள் இது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் எனக் கூறுகின்றனர்.
மேலும் சுயமாக தங்கி இருக்கக்கூடிய வீடுகளுக்கான வீட்டுக் கடன்களின் வட்டிக்கான வரி விலக்கினை 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என கூறுகின்றனர். மூலதன ஆதாய வரி கட்டமைப்பு இந்தியாவில் மிகவும் சிக்கலாக இருக்கிறது வெவ்வேறு சொத்துகளுக்கு வெவ்வேறு விதமான வரி விகிதம் என்பதை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications