டெல்லி: மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதில் குறிப்பிடத் தகுந்த மாற்றம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி. 2017ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 1ஆம் தேதியில் தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் பிப்ரவரி 1ஆம் தேதி சனிக்கிழமையாக இருக்கிறது. வார இறுதி நாளான சனிக்கிழமை அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

1990களின் மத்தியில் வரை மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதத்தின் இறுதி அலுவல் நாளில் தான் தாக்கல் செய்யப்படும். குறிப்பாக மாலை 5 மணிக்கு தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. 1997 ஆம் ஆண்டில் நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நேரத்தை மாலை 5 மணியிலிருந்து காலை 11 மணி ஆக மாற்றினார்.
எனவே காலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது அதற்கேற்ற வகையில் இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கங்கள் ஏற்பட்டன.
பின்னர் 2017 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியை அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மாற்றியமைத்தார்.
இதன்படி 2017 ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. வரும் ஆண்டில் பிப்ரவரி 1ஆம் தேதி சனிக்கிழமையாக இருக்கிறது. எனவே அந்த நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இந்தியாவில் பலமுறை சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அலுவல்கள் முறைப்படி நடப்பதை உறுதி செய்யவும், பல்வேறு விவாதங்கள் நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் சனிக்கிழமைகளில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதை அனுமதிக்கிறது மத்திய அரசு. முறையான நாடாளுமன்ற நடைமுறைகள் அனைத்தையும் பின்பற்றி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
அந்த வகையில் 2015ஆம் ஆண்டில் பிப்ரவரி 28ஆம் தேதி சனிக்கிழமை அன்று தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2016- 17 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டும் சனிக்கிழமை அன்று தான் தாக்கல் செய்யப்பட்டது.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவிக்கு வருவதற்கு முன்னதாக கூட ஓரிருமுறை மத்திய பட்ஜெட் சனிக்கிழமைகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி சனிக்கிழமை அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல 2004 - 2005 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 28ஆம் தேதி சனிக்கிழமை அன்று அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்தார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications