டெல்லி: ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் இந்தியாவுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். அந்த வகையில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பணிகள் மத்திய நிதி அமைச்சகத்தில் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே பட்ஜெட் போடும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஒரு நிதியாண்டிற்கான அரசின் வருவாய் மற்றும் செலவினங்களின் மதிப்பீட்டுக்கான அறிக்கை தொகுப்பு தான் நிதிநிலை அறிக்கை. இதனை நிதி ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாகவே மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவிடும்.

நிதி அமைச்சகத்தின் அலுவலகத்தில் பட்ஜெட் தயாரிப்புக்கு என்று ஒரு பிரத்தியேக பகுதி நிறுவப்பட்டுள்ளது. பட்ஜெட் தயாரிப்பின் போது அதில் இருக்கும் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும் அதில் இருக்கும் விவரங்கள் கசியாமல் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் பிரத்தியேகமாக நிறுவப்பட்ட பகுதியில் தான் பட்ஜெட் பணிகள் அனைத்துமே நடைபெறும்.
குறிப்பிட்ட கடைசி சில நாட்களுக்கு இந்த பணியில் ஈடுபடுவோர் வீட்டிற்கு அனுப்பப்படாமல் அலுவலகத்திலேயே தங்க வைக்கப்படுவார்களாம். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அங்கேயே செய்து தரப்படும். பட்ஜெட் தாக்கலின் போது தான் இவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.
பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பு அனைத்து மத்திய அமைச்சகங்கள், யூனியன் பிரதேசங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் துறைகளின் வருவாய் செலவினங்கள் கேட்கப்படும். இது தவிர விவசாயிகள், வர்த்தகர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சிவில் குழுக்கள், பங்குதாரர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துக்களையும் அரசு பெறும். இந்தக் கூட்டங்கள் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.
இதன் அடிப்படையில் குறிப்பிட்ட துறைகளுக்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய திட்டங்கள் வகுக்கப்படும். தற்போதைய பொருளாதாரம் எந்த அளவில் இருக்கிறது, நிதி பற்றாக்குறை, வர்த்தக நிதி கையிருப்பு வெளிநாட்டு நாணய கையிருப்பு உள்ளிட்டவை அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு மிகப்பெரிய ஆவணமாக தொகுக்கப்படும்.
அந்த ஆவணம் அச்சிட வழங்கப்படும் அந்த நிகழ்வு அல்வா கிண்டும் நிகழ்வு என அழைக்கப்படுகிறது. அப்போது நிதி அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் அல்வா கிண்டி பட்ஜெட் ஆவணங்களை அச்சிடுவதற்கு அனுப்புவதற்கான பணியை தொடங்கி வைப்பார்கள்.
பட்ஜெட் தினத்தன்று காலையில் நிதி அமைச்சர் குடியரசு தலைவரிடம் பட்ஜெட் ஆவணத்தை கொண்டு சென்று அவர் ஒப்புதலை பெற்ற பிறகு தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் இது ஒரு சம்பிரதாயமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை வாசிப்பார். இதன் பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொது விவாதம், விரிவான விவாதம் என்ற இரண்டு பெயர்களில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று பின்னர் நிதி மசோதா என்ற பெயரில் அது நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் அவர் கையெழுத்திட்ட பிறகு தான் இந்த பட்ஜெட் செயலாக்கத்திற்கு வரும்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications