மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதியன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். எதிர்வரும் பட்ஜெட்டில் தங்களது தேவையான சலுகைகளை பல்வேறு துறையினரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
அதேபோல், வரி செலுத்தும் சாமானிய மக்களும் சில சலுகைகளை மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக 6 சலுகைகளை மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கின்றனர்.

அடிப்படை வரி விலக்கு வரம்பு: வரி செலுத்துவோர் புதிய வரி விதிப்பு முறைக்கு மாறுவதற்கு அரசாங்கம் அதிக உந்துதல் அளித்து வருவதால், பழைய வரி விதிப்பு முறையில் எந்த மாற்றங்களும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புதிய வரி விதிப்பின் கீழ் அடிப்படை வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உள்ளது. இந்த அடிப்படை வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம். இது தனிநபர்கள் செலவழிக்க அல்லது சேமிக்க அதிக செலவழிப்பு வருமானத்தை வழங்கும். இதன் மூலம் ஒட்டு மொத்த பொருளாதாரமும் உயரும்.
வீட்டுவசதி துறை: அனைவருக்கும் வீடு மற்றும் வீட்டு உரிமையை ஊக்குவிப்பது போன்ற அரசாங்கத்தின் நோக்கத்திற்கு இணங்க, புதிய வரி விதிப்பின்கீழ், சொந்தமாக வசிப்பதற்காக எடுத்துள்ள வீட்டுக் கடன்களுக்கான வட்டிக்கு விலக்குகளை அளிப்பது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வரி விலக்கு: புதிய வரி விதிப்பின் கீழ் தற்போது ரூ.7 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது. மத்திய பட்ஜெட்டில் இந்த வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிஜமானால், நடுத்தர வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் மற்றும் அவர்களின் நிதியை நிர்வகிப்பதை எளிதாக்கும்.
நிலையான கழிவு அதிகரிப்பு: சம்பளதார வரி செலுத்துவோரை பாதுகாக்க, புதிய வரி விதிப்பின்கீழ், வழங்கப்படும் வருமான வரி நிலையான கழிவு ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரூ.75,000 நிலையான விலக்கு அளிக்கப்படுகிறது.
நிலையான கழிவு அதிகரிப்பட்டால், பணவீக்கத்தை எதிர்த்து போராடவும், வீட்டிலிருந்து வேலை செய்தல், கலப்பின வேலை மற்றும் எங்கிருந்தும் வேலை செய்தல் போன்ற பணி கலாச்சாரத்தில் ஏற்படும் மாற்றங்களால் எழும் தனிப்பட்ட செலவுகளை சமாளிக்க முடியும்.
மின்சார வாகனங்களுக்கு வரி சலுகை: கார்பன் உமிழ்வை குறைக்க, பசுமை ஆற்றலை நோக்கி நகர, பிரிவு 80இஇபி-ன் கீழ், (மின்சாரம் வாகனம் வாங்குவதற்காக வாங்கிய கடனுக்கான வட்டிக்கான விலக்கு) விலக்கை மீண்டும் அமல்படுத்தி, புதிய வரி விதிப்புக்கும் நீட்டிக்க வேண்டும்.
சொத்து விற்பனை: சொத்தை விற்பனை செய்பவர் வெளிநாட்டில் வாழும் நபராக (என்ஆர்) இருந்தால், அந்த சொத்தை வாங்குபவர் இந்த ஒரு முறை பரிவர்த்தனைக்கு TAN பெற வேண்டும், அதிக விகிதத்தில் வரியை கழித்து, டிடிஎஸ் ரிட்டனை தாக்கல் செய்ய வேண்டும்.
இது ஒரு சிக்கலான செயல்முறையாகும். எனவே இதனை எளிதாக்க, வெளிநாட்டில் வாழும் விற்பனையாளர்களுக்கு உள்நாட்டவர்கள் போன்ற சலான் கம் ஸ்டேட்மென்ட்டை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications