வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் 2-வது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு துறையினரும் தங்களுக்கான எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து பரிந்துரைக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு துறைகளுக்கும் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று அத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
இனிவரும் நாட்களில் ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியங்கள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதுபோன்ற இன்சூரன்ஸ் ப்ரீமியங்களின் வரி விலக்கை எளிமைப்படுத்துவது மில்லியன் கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஏனெனில் டிசம்பரில் வெளியிடப்பட்ட இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் அறிக்கையின் படி இனிவரும் நாட்களில் ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.

IRDAI அறிக்கையின்படி, 2023 முதல் 2024-ஆம் ஆண்டில் தொடர்ந்து 2-வது ஆண்டாக இன்சூரன்ஸ் விகிதம் 3.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 4 சதவீதமாகவும் 2021 முதல் 2022-ஆம் ஆண்டில் 4.2 சதவீதமாகவும் இருந்தது. தொற்று நோய் காப்பீட்டிற்கான தேவையை அதிகரித்தது. அதிலிருந்து தற்போது நிலையான வளர்ச்சி இருந்து வருகிறது. இதற்கு இன்னும் ஊக்கமளிக்கும் வகையில் சில மாற்றங்களை காப்பீட்டு துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
அதோடு டேர்ம் இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு தனித்தனி கழிவுகளை அரசு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு பிரிவு 80C-இன் கீழ் வரி விலக்கு வரம்புகளை அதிகரித்தல், இன்சூரன்ஸ் பிரீமியங்களுக்கு பிரத்தியேக வரம்பை அறிமுகம் செய்தல், காப்பீட்டுத் துறைக்கு வளர்ச்சியை அதிகரிக்கும். கூடுதலாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி போன்ற திட்டங்களில் பயன்பெற கட்டாயம் டேர்ம் இன்சூரன்ஸ் தேவை என்பது போன்ற அறிவிப்புகள் உதவியாக இருக்கும் என்று ACKO லைஃப் இன்சூரன்ஸ்-இன் தலைமை நிர்வாக அதிகாரியான சந்தீப் கோயங்கா கூறியுள்ளார்.
அதேபோல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நீண்ட காலமாக ஒரு கோரிக்கையை வைத்து வருகின்றன. ஓய்வூதிய வருமானத்திற்கு வரி விதிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. அதோடு 2050-ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதிய சேமிப்பு குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஓய்வூதிய திட்டங்களுக்கு வரி விதிப்பை எளிமைப்படுத்துவது அல்லது நீக்குவது மக்களை சேமிக்க ஊக்குவிக்கும். இதன் மூலம் தங்கள் ஓய்வூதியத்திற்கு மக்கள் திட்டமிட தொடங்குவார்கள் மேலும் என்பிஎஸ் பங்களிப்புகளுக்கு வழங்கப்படும் வரி விலக்கு வரம்பு, ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கான ஓய்வூதிய திட்ட விரிவாக்கம் போன்றவை காப்பீட்டு துறையின் கோரிக்கைகளாக உள்ளன.


Click it and Unblock the Notifications