டெல்லி: உலக அளவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய துறையாக மருத்துவ துறை மற்றும் மருந்து ஆராய்ச்சி துறை இருந்து வருகிறது. இந்தியாவிலும் மருந்து சம்பந்தப்பட்ட துறை வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அதனை வேகப்படுத்தும் வகையிலான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என இந்த துறை சார்ந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கும் மருந்து தயாரித்து ஏற்றுமதி செய்யக்கூடிய முக்கியமான நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் தயார் செய்யப்படும் மருந்துகள் சுமார் 200 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆப்பிரிக்க நாடுகளில் பயன்படுத்தும் மருந்துகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மருந்துகள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுபவையாக இருக்கின்றன. அதேபோல பிரிட்டனில் 25 சதவீத மருந்து தேவையை இந்திய மருந்து நிறுவனங்கள்தான் பூர்த்தி செய்கின்றன.
2030 ஆம் ஆண்டுக்குள் இந்திய மருந்து துறை 120 முதல் 130 பில்லியன் டாலர்கள் வரையிலும் 2047 ஆம் ஆண்டில் 450 பில்லியன் டாலர்கள் வரையிலும் வளர்ச்சி அடையும் என கணிக்கப்படுகிறது. இந்த கணிப்பினை உண்மையாக்க வேண்டுமென்றால் மத்திய பட்ஜெட்டில் இந்தியாவில் மருந்து சம்பந்தப்பட்ட ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இத்துறைக்கு இந்தியாவில் செயல்படக்கூடிய மருந்து நிறுவனங்கள் தங்களுடைய மொத்த விற்பனை மதிப்பில் 8.4 சதவீதம் தொகையை ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்கின்றன. இது சர்வதேச சராசரியான 11 சதவீதத்தை விட குறைவு.
இந்த இடைவெளியை போக்க வேண்டும் என்றால் அரசு தேசிய ஆராய்ச்சி நிதியில் 10 சதவீத தொகையை மருந்து ஆராய்ச்சிக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் சுதர்சன் ஜெயின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் குறிப்பிட்ட சில ரசாயனங்களின் உற்பத்தி மற்றும் மருந்து உற்பத்திக்கான அனுமதி பெறும் நடைமுறைகளை அரசு எளிமைப்படுத்த வேண்டும் என இந்திய மருந்து உற்பத்தியாளர் அமைப்பின் பொது மேலாளர் அனில் கூறுகிறார்.
மத்திய அரசு இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை சுகாதாரத் துறைக்கான செலவினங்களுக்கு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை அந்த இலக்கு எட்டப்படவே இல்லை எனக் கூறும் அனில், அரசு தற்போது வரை ஜிடிபியில் 1.8% தொகையை தான் சுகாதாரத் துறைக்காக செலவிடுகிறது. இதனை உயர்த்த வேண்டும் என வலியுறுத்துகிறார்.
தற்போது மருந்து தயாரிப்பதற்கு தேவையான சில பொருட்களுக்கு சீனா உள்ளிட்ட நாடுகளையே இந்தியா சார்ந்து இருக்கிறது. அந்த நிலைமையை போக்க குறிப்பிட்ட சில ரசாயனங்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் வகையில் நிறுவனங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மருந்து உற்பத்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெறும் வகையிலான அறிவிப்புகள் கொள்கைகளை வெளியிட வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தற்போது இந்தியாவில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றால் பல்வேறு துறைகளிடம் அனுமதி வாங்க வேண்டும். இந்த நடைமுறை நீண்ட காலத்தை எடுத்துக் கொள்கிறது இதனை ஒற்றை சாளர முறைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications