மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய ஆயத்தமாகி வருகிறார். மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணி அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பட்ஜெட்டை வடிவமைப்பதில் அரசு அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. இந்த ஆண்டு பட்ஜெட் தயாரிப்பில் தூண்களாக விளங்கிய துஹின் காந்தா பாண்டே உள்ளிட்ட 4 அரசு அதிகாரிகள் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
துஹின் காந்தா பாண்டே:
1987ம் ஆண்டு ஒடிசா பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான துஹின் காந்தா பாண்டே, சில வாரங்களுக்கு முன்புதான் நிதி மற்றும் வருவாய் செயலாளராக பொறுப்பேற்றார். அரசுக்கு வருவாய் திரட்டலை உறுதி செய்ய வேண்டிய அதேவேளையில் வரி சலுகைகள் கிடைக்கும் என்ற அனைத்து தரப்பினர்களின் எதிர்பார்ப்புகளையும் சமநிலைப்படுத்தும் கடினமான பணியை மேற்கொண்டுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ள வருமான வரிச் சட்டத்தின் மறுசீரமைப்பை அவர் ஆய்வு செய்கிறார்.

வி.ஆனந்த நாகேஸ்வரன்:
நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரனும், அவரது குழுவும் பொருளாதார ஆய்வறிக்கை தயாரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதற்கும், மிகவும் நிச்சயமற்ற மற்றும் உலகமயமாக்கல் நீக்கம் செய்யப்பட்ட உலகத்துக்கு தயாராவதற்கும், சீர்த்திருத்தங்கள் செய்யவும் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கம் செய்வதற்கான செயல்திட்டத்தை உறுதிப்படுத்துவதற்காக அவரும் அவரது குழுவினரும் தயாரித்துள்ள பொருளாதார ஆய்வறிக்கை அனைத்து தரப்பினராலும் ஆர்வத்துடன் கவனிக்கப்படும்.
மனோஜ் கோவில்:
செலவுத்துறை செயலாளர் மனோஜ் கோவில், 1991ம் ஆண்டு மத்திய பிரதேச பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாவார். மானியங்களை மறுசீரமைப்பு செய்தல், செலவினங்களின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவை இவரது கையில் உள்ள சில முக்கிய பணிகளாகும். செலவுத்துறை செயலாளராக பொறுப்பேற்பதற்கு முன், பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் செயலாளராக இவர் இருந்தார்.
அஜய் சேத்:
பொருளாதார விவகாரத் துறையின் செயலாளர் அஜய் சேத், இறுதி பட்ஜெட் ஆவணங்களை தயாரிக்கும் மற்றும் பெரிய பொருளாதார ஸ்திரத்தன்மையை மேற்பார்வையிடும் துறைக்கு தலைமை தாங்குகிறார். 1987ம் ஆண்டு கர்நாடகா பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான இவருக்கு, நுகர்வு ஊக்குவிக்க வேண்டும் என்ற பலமான கோரிக்கைகளுக்கு மத்தியில், வளர்ச்சி மற்றும் நிதி ஒருங்கிணைப்பு கட்டாயங்களை சமநிலைப்படுத்தும் கடினமான பணி உள்ளது.


Click it and Unblock the Notifications