மத்திய பட்ஜெட்டில் வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் புதிய வரி கணக்கு தாக்கலில் வீட்டு கடனுக்கான வரி விலக்கை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வரும் 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இதில் வருமான வரி உச்சவரம்பு மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த சூழலில் புதிய வரி தாக்கல் நடைமுறையில் வீட்டுக் கடனுக்கான வரி விலக்கை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியாவில் தற்போது இரண்டு முறைகளில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யலாம். பழைய நடைமுறையின் படி வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்களுக்கு வீட்டு கடனுக்காக செலுத்தும் வட்டி மற்றும் அசல் தொகையை கணக்கு காட்டி வருமான வரி கழிவு பெற முடியும். வீட்டுக் கடன் பெற்றவர்கள் பழைய வரி நடைமுறையில் தாங்கள் வீட்டு கடனுக்கு செலுத்தக்கூடிய வட்டியில் ஒரு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம்.
ஆனால் புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் இது போன்ற எந்த ஒரு பிரிவுகளும் இல்லை. எனவே புதிய வரி நடைமுறையில் இதனை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
ஐசிஏஐ எனப்படும் பட்டயக் கணக்காளர்களுக்கான இந்திய நிறுவனம் மத்திய அரசுக்கு முக்கியமான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில் புதிய வரி நடைமுறையில் வீட்டுக் கடனுக்காக செலுத்தக்கூடிய வட்டி தொகையில் 2 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கழிவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் புதிய வரி கணக்கு நடைமுறையில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என இந்த நிறுவனம் மத்திய அரசிடம் கூறியுள்ளது. மேலும் வீட்டு சொத்துகளில் இருந்து வருமானம் என்ற பிரிவின் கீழ் ஏற்பட்ட இழப்புகளை மற்ற வருமானங்களோடு ஈடு செய்யவோ அல்லது எதிர்காலத்தில் சரி செய்யவோ புதிய வரி கணக்கு நடைமுறையில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. எனவே கடன் வாங்கி சொந்தமாக வீடு வாங்கக்கூடிய நபர்கள் குறிப்பாக மிடில் இன்கம் பிரிவை சேர்ந்தவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே புதிய வரி நடைமுறையில் குறிப்பிட்ட சில வரி விலக்குகளை இணைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசு வரக்கூடிய பட்ஜெட்டில் வருமான வரி பிடித்தங்கள் தொடர்பான பல்வேறு மாற்றங்களை அறிவிக்கலாம் என சொல்லப்படுகிறது.
குறிப்பாக வீட்டுக் கடனுக்கான வட்டி தொகை செலுத்துதல் மற்றும் அசல் தொகையை செலுத்துதல் ஆகிய இரண்டையும் ஒரே பிரிவின் கீழ் கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வீட்டு கடன்களுக்கான வரி விலக்கினை ஐந்து லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications