2026- 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை எல்லாம் வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்புகளை தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு பொருட்களின் விலை குறைய போகிறது. அதேவேளையில் பல்வேறு விலை பொருட்களின் விலை உயரப்போகிறது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய ஒன்பதாவது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். காலை 11 மணியளவில் பட்ஜெட் உரையை அவர் தொடங்கினார். இதில் பல்வேறு பொருட்களுக்கான வரியை நீக்கினார், பல்வேறு பொருட்களுக்கான வரியை உயர்த்தினார். இது அனைத்துமே நேரடியாக நம் பட்ஜெட்டிலேயே கை வைப்பவையாக இருக்கின்றன.

வெளிநாட்டு சுற்றுலா: வெளிநாட்டு சுற்றுலா செலவுகள் இனி குறையும். அதாவது வெளிநாட்டு சுற்றுலாவுக்காக வசூல் செய்யப்படும் டிசிஎஸ் எனப்படும் மூலதனத்தில் கழிக்கப்படும் வரி 5- 20 சதவீதமாக இருந்த நிலையில் அது 2% ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனவே வெளிநாட்டு சுற்றுலாவுக்கான பேக்கேஜ் செலவுகள் இனி குறைய போகின்றன.
விளையாட்டு பொருட்கள்: விளையாட்டு சம்பந்தப்பட்ட உபகரணங்களின் விலைகள் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார். எனவே அவற்றின் விலை குறையப்போகிறது.
மின்சார வாகனம்: இந்தியாவில் பசுமை எரிசக்தி சம்பந்தப்பட்ட மாற்றத்தை ஊக்குவிக்க அரசு தீவிரம் காட்டுகிறது என்பதால் மின்சார வாகன பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் செல்களுக்கான அடிப்படை சுங்கவரியில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளது. எனவே மின்சார வாகன பேட்டரிகளின் விலை குறையும் இதன் எதிரொலியாக மின்சார வாகனங்களின் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது.
மொபைல் போன்: மொபைல் போன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் மற்றும் சில மூலதன பொருட்களுக்கு வரி விலக்கு தரப்பட்டுள்ளதால் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட்களின் விலை குறைய போகிறது.
வெளிநாட்டு கல்வி செலவு குறையும்: இது மட்டுமில்லாமல் வெளிநாட்டில் சென்று கல்வி பயில்வதற்கான செலவுகள் இனி குறையப் போகின்றன. வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கான செலவுகளுக்கு எல்ஆர்எஸ் திட்டத்தின் கீழ் பிடிக்கப்படும் டிடிஎஸ் வரி குறைக்கப்பட்டு இருக்கிறது.
கனிமங்கள் : சில வகை கனிமங்களுக்கான இறக்குமதி வரி 5இல் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதால் அவற்றின் விலை குறையும்.சோலார் பேனல்கள், சிவில் விமான உற்பத்தி பாகங்கள் மற்றும் மைக்ரோவேவ் ஓவன் ஆகிய பொருட்கள் மீதான இறக்குமதி வரிக்கு விலக்கு தரப்பட்டுள்ளதால் அவற்றின் விலை சரியும்.
மருத்துவ செலவு: மருத்துவ செலவுகள் குறைய போகின்றன. குறிப்பாக நீரிழிவு மற்றும் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைகளுக்கான மருந்துகளுக்கு வரி விலக்கு தரப்பட்டுள்ளது. எனவே அவற்றின் விலை குறையும் இது நேரடியாகவே மக்களின் மருத்துவ செலவுகளை குறைக்கும்.
காலணி: தோலால் தயாரிக்கப்பட்ட காலணிகள் மற்றும் ஷூக்களின் விலைகள் குறையப் போகின்றன.
ஆடம்பர கைக்கடிகாரம்: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஆடம்பர கைக்கடிகாரங்களின் விலைகள் உயரப் போகின்றன.
காபி: காபி தயாரிக்கும் சில வகை இயந்திரங்களின் விலை உயர்வதால் காபி விலை உயர வாய்ப்புள்ளது.
பேங்கிங்: ஏடிஎம் இயந்திரங்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் வங்கிகள் அதற்கு ஏற்ப நம்மிடம் சர்வீஸ் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளது.
மதுபானம்: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களின் விலை உயர போகிறது.சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள், ஆடம்பர மற்றும் அடிப்படை அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைகள் உயரப்போகின்றன.
சில வகை உரங்களுக்கான சிறப்பு வரி விலக்கு நீக்கப்பட்டுள்ளதால் உரங்களின் விலை உயர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications