உலகம் முழுவதும் கிரிப்டோ, tokenization பற்றி தீவிரமாக பேசி வரும் வேளையில் இந்தியாவில் இதற்கு பெரிய முட்டுக்கட்டை போடப்பட்டு உள்ளது. சமீபத்தில் நடந்த முக்கியமான பொருளாதார கூட்டத்தில் உலகில் இருக்கும் அனைத்து சொத்துக்களையும், உதாரணமாக கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, நிலம், போன்ற அனைத்தையும் டோக்கனாக மாற்றி வர்த்தகத்திற்கு பயன்படுத்த வேண்டும் பேச்சு எழுந்தது.
ஆனால் இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் மத்திய அரசின் கடுமையான வரி கட்டுப்பாடு காரணாக முடங்கியுள்ளது. இந்த நிலையில் நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இதற்கு விடிவு காலம் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கிரிப்டோகரன்சி மற்றும் விர்ச்சுவல் டிஜிட்டல் அசெட்ஸ் (VDA) மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் மத்திய அரசின் தெளிவற்ற விதிமுறைகள் மற்றும் கடுமையான வரி விதிப்பு காரணமாக இதில் முதலீடு செய்வது சிக்கலாகவும், விலை உயர்ந்ததாகவும் மாறியுள்ளது.
2026 மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும் நிலையில், கிரிப்டோ துறையினர், வரி நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. வரி விதிப்பில் நியாயமான மாற்றம் வருமா? அல்லது தற்போதைய கடுமையான நிலை தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போதைய வரி விதிகளின்படி, விர்ச்சுவல் டிஜிட்டல் அசெட்ஸ் (VDA)-களில் ஏற்படும் லாபத்துக்கு 30 சதவீதம் பிளாட் வரி விதிக்கப்படுகிறது. இது வருமான அளவுக்கு ஏற்ப மாறாமல் அனைவருக்கும் ஒரே விகிதத்தில் உள்ளது. இதனுடன் சர்சார்ஜ் மற்றும் செஸ் சேர்த்தால் உண்மையான வரி விகிதம் சுமார் 34.5 சதவீதமாக உயர்கிறது.
மிக முக்கியமாக, VDA-களில் ஏற்படும் நஷ்டத்தை மற்ற VDA லாபத்துடன் சரிக்கட்ட முடியாது. நஷ்டத்தை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லவும் (carry forward) முடியாது. வாங்கிய விலை (cost of acquisition) தவிர வேறு எந்த செலவும் (புரோக்கரேஜ் கட்டணம் போன்றவை) லாபத்தில் கழிக்க முடியாது. மேலும் ரூ.50,000க்கு மேல் மதிப்புள்ள VDA பரிசாக வழங்கினால் வரிக்கு உட்படும். இந்த விதிகள் அனைத்தும் வர்த்தக அளவு, முதலீட்டாளர் வகை, வைத்திருக்கும் காலம் போன்றவற்றை பொருட்படுத்தாமல் நடக்கும் விஷயமாகும்.
உலகில் உள்ள பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வரி விதிப்பு மிகக் கடுமையானதாக உள்ளது. UAE மற்றும் சிங்கப்பூரில் தனிநபர் கிரிப்டோ முதலீட்டுக்கு 0 சதவீத வரி. அமெரிக்காவில் மூலதன லாப வரி விதிப்புடன் நஷ்டத்தை சரிக்கட்ட அனுமதி. ஜெர்மனியில் ஒரு ஆண்டுக்கு மேல் வைத்திருந்தால் வரி இல்லை. இந்தியாவில் இந்தியாவில் இத்தகைய சலுகைகள் இல்லை. இதனால் கிரிப்டோ துறையினர் பட்ஜெட் 2026இல் வரி விதிப்பு தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கின்றனர்.
2026 பட்ஜெட் இதில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கிரிப்டோ முதலீடு செய்பவர்கள் அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது. லாபம் வந்தால் 30 சதவீதம் வரி, நஷ்டம் வந்தால் அதை சரிக்கட்ட முடியாது.
இதனால் பலர் கிரிப்டோவில் முதலீடு செய்ய தயங்குகின்றனர். பட்ஜெட்டில் நியாயமான வரி விதிப்பு வந்தால், கிரிப்டோ முதலீடு எளிதாகி, பலருக்கு புதிய வாய்ப்பாக இருக்கும். அரசு வரி வசூலிக்கும் அதே நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications