2027 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக மத்திய அமைச்சர்களின் சம்பளத்திற்காகவும், பிரதமர் அலுவலகம் மற்றும் இந்தியாவிற்கு வருகை தரக்கூடிய விருந்தினர்களுக்காக செலவிடுவதற்காகவும் அரசு எவ்வளவு தொகையை ஒதுக்கி இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு இருக்கும் தகவலின் படி மத்திய அமைச்சர்களின் சம்பளத்திற்காகவும் மற்ற செலவினங்களுக்காகவும் எதிர் வரக்கூடிய நிதி ஆண்டுக்கு 620 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது 2025-26 ஆம் நிதி ஆண்டில் 483.54 கோடியாக இருந்தது. அதாவது முந்தைய பட்ஜெட்டை விட தற்போது மத்திய அமைச்சர்களின் சம்பளம் மற்றும் செலவினங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் பிற அலோவென்சுகளுக்கும், இணை அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்கள் ஆகியோருக்கான செலவினங்களும் அடங்கும். அடுத்ததாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்திற்கு 256.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது இது முந்தைய ஆண்டு 279.74 கோடியாக இருந்து. இப்போது குறைக்கப்பட்டு இருக்கிறது.
அடுத்ததாக அமைச்சரவை செயலகத்திற்காக 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது முந்தைய நிதியாண்டில் 78 கோடி ரூபாயாக இருந்தது. பிரதமர் அலுவலக செலவினங்களுக்காக 73.52 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு பட்ஜெட்டில் 68 கோடி ஆக தான் இருந்தது பிரதமர் அலுவலகத்திற்கான செயல்பாட்டு செலவினங்கள் உயர்ந்திருப்பதால் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல இந்தியாவுக்கு வருகை தரக்கூடிய விருந்தினர்களின் உபசரிப்பு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட செலவினங்களுக்காக 5.76 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் 6.20 கோடியாக தான் இருந்தது. முன்னாள் ஆளுநர்களின் செலவினங்களுக்காக 1.53 கோடியை அரசு ஒதுக்கீடு செய்திருக்கிற.
துறைவாரியாக எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்ற விவரங்களும் வெளிவந்திருக்கின்றன. இதன்படி அதிகபட்சமாக மத்திய அரசு நிதித்துறைக்கு 19 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது. பாதுகாப்புத் துறைக்கு 7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. வேளாண் துறைக்கு 1.4 லட்சம் கோடி , அணுசக்தி துறைக்கு 24,123.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு 24 ,566 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு 2,81,377 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு 28,183 கோடி ரூபாயும் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு 4479 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications