இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகேஷ் கங்வால், தான் படித்த கல்லூரிக்கு 100 கோடி ரூபாய் நன்கொடையாக வாரி வழங்கியுள்ளார்.
ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவரான ராகேஷ் கங்வால், அங்கு இயங்கி வரும் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவினை மேம்படுத்த, இந்த மாபெரும் நன்கொடையினை வழங்கியுள்ளார்.
ஐஐடி கான்பூர் கடந்த ஆண்டே மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப பிரிவினை தொடங்குவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் தான் இந்த பணிகளுக்காக கங்வால் 100 கோடி ரூபாய் நன்கொடையினை அளித்துள்ளார்.
விளிம்பில் இருக்கும் இலங்கை.. 40000 மெட்ரிக் டன் டீசல் கொண்டுபோய்ச் சேர்த்த இந்தியா..!

இது மிகப்பெரிய விஷயம்
இது குறித்து ஐஐடி கான்பூர் வளாகத்தின் இயக்குனர் அபய் கரண்டிகர், இது மிகப்பெரிய விஷயம். இண்டிகோ ஏர்லைன்ஸின் இணை நிறுவனர் ராகேஷ் கங்வால், எங்களின் முன்னாள் மாணவர். ஐஐடி கான்பூரில் உள்ள மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவை ஆதரிக்கும் நோக்கில் 100 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார் என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

இது எனது பாக்கியம்
மேலும் கங்வால் இந்த மருத்துவ பள்ளியின் ஆலோசனை குழுவிலும் இணைவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கங்வால் கூறுகையில் (பிடிஐ), இப்படிப்பட்ட உன்னதமான முயற்சியில் இணைந்திருப்பது எனது பாக்கியம். பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான தலைவர்களை உருவாக்கிய நிறுவனம், தற்போது சுகாதார துறையை மேம்படுத்துவதை கண்டு நான் பெருமைப்படுகின்றேன்.

தொழில் நுட்பத்தின் முக்கிய பங்கு
முன் எப்போதையும் விட தற்போதைய காலக்கட்டங்களில் சுகாதாரத் துறையானது, தொழில் நுட்பங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இதற்கிடையில் ஐஐடி கான்பூரின் இந்த முயற்சி இன்னும் இதனை துரிதப்படுத்தும். மருத்துவ துறையிலும் இன்னும் பல சாதனைகள் எட்டப்படலாம்.

முதல் தொகுப்பு
இந்த மருத்துவ பள்ளி இரண்டு கட்டங்களாக மேம்படுத்தப்படும். இதில் முதல் கட்டமாக 500 படுக்கை வசதிகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவனை, கல்விக்கான வசதிகள், குடியிருப்புகள், ஹாஸ்டல் வசதிகள், சேவை என பல வகையாக கட்டப்படும், மொத்தம் 8 பிரிவுகளாக இருக்கும் இந்த கட்டமைப்பானது, 10000 சதுர அடி பரப்பளவை கொண்டதாக இருக்கும். இந்த கட்டமைப்பு வசதிகளை 3 - 5 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாவது தொகுப்பு
இரண்டாவது கட்டமாக இந்த மருத்துமனையானது 1000 படுக்கை வசதிகளை கொண்ட ஒன்றாக மேம்படுத்தப்படும். இதில் மருத்துவ பிரிவுகள், ஆராய்ச்சி பகுதிகள், மாற்று மருத்துவம், மருத்துவமனை நிர்வாகம், பொது சுகாதார திட்டங்கள், விளையாட்டு மருத்துவம், துணை மருத்துவ துறைகளை சேர்ப்பது என பல வகையிலும் விரிவாக்கம் செய்வதும் அடங்கும் என தெரிவித்துள்ளது.