பட்ஜெட் என்றால் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் அவற்றில் எத்தனை அறிவிப்புகள் நிறைவேற்றப்படுகின்றன என்பது கேள்விக்குறி தான்.
இப்படி இருக்கையில் #PromisesDelivered என்ற ஹேஷ்டேக்கில் மத்திய நிதி அமைச்சகம் இதுவரை வெளியான பட்ஜெட் அறிவிப்புகளின் தற்போதைய நிலையை விவரித்து எக்ஸ் என்னும் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் முக்கியமானவற்றை பார்க்கலாம்.

நிலுவையில் இருந்த திவால் வழக்குகள்: திவால் நிலையில் உள்ள வழக்குகளை விரைவாக தீர்க்க தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தின் கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என அரசு பட்ஜெட்டில் அறிவித்திருந்தது.
இதன் படி, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்திற்கு புதிதாக 20 உறுப்பினர்கள் நியமனம், மின்னனு நீதிமன்றங்கள் அமைப்பு அமல்படுத்தப்பட்டது மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கட்டமைப்புகள் உருவாக்கம் என்பன உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஸ்டார்ட் அப் ஊக்குவிக்க சட்டத்தில் திருத்தம்: வரையறுக்கப்பட்ட LLP சட்டம் 2008இல் பல்வேறு திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி திருத்தப்பட்ட LLP சட்டம் 2021 மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எளிதாக தொழில் தொடங்குவது மற்றும் நாடு முழுவதிலும் ஸ்டார்ட்அப்களை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.
இதற்காக பழைய சட்டத்தில் 20 பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது, பழைய பிரிவுகள் நீக்கப்பட்டு புதிதாக 7 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன என அரசு விளக்கமளித்துள்ளது.
கோரப்படாத பங்குகள் மற்றும் ஈவுத்தொகைகளுக்கு தீர்வு: போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்களுக்கு சேர வேண்டிய பங்குகள் மற்றும் முதிர்வு தொகைகளை கோராமலேயே இருந்து வந்தனர்.
எனவே முதலீட்டாளர்களால் உரிமை கோரப்படாத பங்குகள் மற்றும் ஈவுத்தொகைகளை சிக்கல் இல்லாத முறையில் திரும்ப பெற,உதவும் வகையில் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் நிறுவப்பட்டது.
கோரப்படாத ஈவுத்தொகைகள், முதிர்வு வைப்பு தொகைகள், , முதிர்ந்த கடன் பத்திரங்களுக்கான பணம் ஆகியவற்றை திரும்ப பெறுவதற்கு இது வழிகாட்டுவதோடு , முதலீட்டாளர்களுக்கு கல்வி, விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்து உதவுகிறது.
தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதி: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு கூட்டாக தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதி (NIIF) அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா,கனடா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஆகிய நாடுகளில் இருந்து 17 முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி பெறப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கு அதிக சலுகை: மூத்த குடிமக்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வைப்பு வரம்பினை மத்திய அரசு ரூ. 15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தியது.
இதனால் நடப்பு நிதி ஆண்டில் செப்டம்பர் 2023 வரை 74,801.73 கோடி ரூபாய் இந்த திட்டத்தில் வைப்பு தொகையாக வந்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications