நொய்டா: புதிதாக வீடு வாங்குபவர்கள் அத்துடன் புதிதாக கார் வாங்க வேண்டும் என்றும் நினைப்பார்கள். அப்படி ஆசை கொண்டவர்களுக்கு என்றே ஒரு பிரத்தியேக சலுகையை அறிவித்துள்ளது ஜேபி கிரீன்ஸ் (Jaypee Greens) என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம்.
குர்குவானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது ஜேபி கிரீன்ஸ் என்று ரியல் எஸ்டேட் நிறுவனம். நிலங்களை கையகப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்புகள் , தனி வீடுகள் ஆகியவற்றை கட்டி விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம். அண்மையில் நொய்டாவில் தங்கள் நிறுவனம் கட்டும் வீட்டினை வாங்குபவர்களுக்கு சூப்பரான சலுகையை அறிவித்துள்ளது.

இதன்படி ஒரு வில்லா வாங்குபவர்களுக்கு 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் கார் (Lamborghini Urus) பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌரவ குப்தா என்ற நபர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "நொய்டாவில் ஆடம்பர குடியிருப்புகள் விற்பனைக்கு வருகின்றன ஒரு குடியிருப்பின் விலை 26 கோடி ரூபாய். இந்த 26 கோடி ரூபாய் மதிப்புள்ள வில்லாவை வாங்குபவர்களுக்கு என்ன பரிசு தெரியுமா? 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி கார்" என தெரிவித்துள்ளார். ஜேபி குழுமம் நொய்டாவில் கட்டமைத்து வரும் இந்த ஆடம்பர வில்லாவில் கோல்ஃப் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் இருக்கின்றனவாம்.

இந்த 26 கோடி ரூபாய் என்பது வீட்டுக்கு மட்டுமே, இது தவிர பார்க்கிங் மற்றும் பிற கட்டணங்களுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டி இருக்கிறதாம். அதாவது வீட்டின் விலை 26 கோடி ரூபாய் கோல்ஃப் மைதானத்தை பார்க்கும் படியான வீட்டு மாடி இருக்க வேண்டும் எனில் அதற்கு கூடுதலாக 50 லட்சம் ரூபாய், கார் பார்க்கிங்குக்கு 30 லட்சம் ரூபாய், கிளப் மெம்பர்ஷிப்புக்கு 7 லட்சம் ரூபாய், பவர் பேக்கப்புக்கு 7.5 லட்சம் ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர்.
அவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. ஒரு பயனர் ஏற்கனவே பல்வேறு சட்ட சிக்கல்களில் சிக்கி இருக்கிறது ஜேபி குழுமம், எப்படி இருந்தாலும் இந்த வீட்டினை வாங்குபவர்கள் எதிர்காலத்தில் அடிக்கடி நீதிமன்றத்திற்கு சென்று வர வேண்டி இருக்கும் எனவே தான் அவர்களே இலவசமாக காரை பரிசாக வழங்குகிறார்கள் என கிண்டலாக பதிவு செய்துள்ளார்.

இவ்வளவு தொகை கொடுத்து ஒரு வில்லாவை வாங்குவதற்கு பதிலாக ஒரு இடத்தை வாங்கி ஐந்து வில்லாக்களை கட்டி நீங்களாகவே சொந்தமாக லம்போர்கினி கார் வாங்கிக் கொள்ள முடியும் என மற்றொரு பயனர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications