இந்தியக் கடன் சேவை சந்தையில் பெரிய அளவில் பிரபலம் அடைந்து வரும் ஒரு முக்கியமான திட்டமான பை நவ் பே லேட்டர் வெறும் 4 வருடத்தில் 10 மடங்கு வளர்ச்சி அடைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது பை நவ் பே லேட்டர் திட்டம் மிகவும் பிரபலமாகியுள்ளது. இத்திட்டத்தைப் பயன்படுத்தி ஈகாமர்ஸ் தளத்தில் பொருட்களை இலவசமாக வாங்கிக்கொள்ள முடியும், ஆனால் அந்தத் தொகையைக் குறிப்பிட்ட காலத்திற்குத் தவணை முறையில் செலுத்த வேண்டும்.
அனைத்தையும் தாண்டி இந்தச் சேவையின் கீழ் வாங்கும் கடனுக்கு வட்டியில்லை என்பதால் குறுகிய காலத்தில் இத்திட்டம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
பை நவ் பே லேட்டர்
இந்தியாவில் தற்போது பை நவ் பே லேட்டர் (Buy Now Pay Later) திட்டத்தின் மொத்த சந்தை மதிப்பு 3 முதல் 3.5 பில்லியன் டாலர் அளவில் இருந்த நிலையில் 2026ஆம் ஆண்டுக்குள் இது 45 முதல் 50 பில்லியன் டாலர் வரையில் உயரும் என ரெட்சீர் நிறுவனம் கணித்துள்ளது.
வாடிக்கையாளர் எண்ணிக்கை
இதேபோல் இச்சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தற்போது 10-15 மில்லியனாக இருக்கும் வேளையில் இது 80 -100 மில்லியனாக உயரும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. இது வேறு எந்த நிதியியல் சேவையிலும் இவ்வளவு பெரிய வளர்ச்சி ஏற்பட்டது இல்லை.
1,00,000 ரூபாய் கடன்
இந்தியாவில் தற்போது பை நவ் பே லேட்டர் திட்டத்தின் கீழ் அதிகப்படியாக ஒரு வாடிக்கையாளருக்கு 1,00,000 ரூபாய் வரையில் அளிக்கப்படுகிறது. இது கிரெடிட் கார்டு அளவீட்டை விடவும் அதிகம் அதேபோல் வட்டியும் இல்லை என்பதால் மக்கள் அதிகம் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
கிரெடிட் கார்டு வர்த்தகம்
பை நவ் பே லேட்டர் திட்டம் மூலம் அடுத்த சில வருடத்தில் கிரெடிட் கார்டு வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தச் சேவையைப் பெறுவது மிகவும் எளிதாக இருக்கும் காரணத்தால் மக்கள் ஆர்வமுடன் பயன்படுத்துகின்றனர்.
மொபிகிவிக் நிறுவனம்
மொபிகிவிக் நிறுவனத்தின் பை நவ் பே லேட்டர் சேவை வர்த்தகம் இரண்டு வருடத்தில் இரட்டிப்பு வளர்ச்சியை அடைந்துள்ளது. அபுதாபி இண்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கும் மொபிகிவிக் பை நவ் பே லேட்டர் சேவையின் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக் காலத்தில் பை நவ் பே லேட்டர் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. சமீபத்தில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற பல முன்னணி ஈகாமர்ஸ் சேவை நிறுவனங்களும் பை நவ் பே லேட்டர் சேவையைத் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வர்த்தகத்தை அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications