நீங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெறும் வயதில் சொந்தமாக வீடு வாங்கத் திட்டமிட்ட காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது.
இப்போது சராசரியாக 30 வயதுக்கள்பட்டவர்கள் வீடுகளை வாங்க வேண்டும், அதுவும் திருமணத்துக்கு முன்பாக என்று யோசிக்கின்றனர்.

நல்ல நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்கள் சர்வசாதாரணமாக ரூ. 1 கோடிக்கு மேற்பட்ட வீடுகளை வாங்கத் தொடங்கி விட்டனர்.
45 வயதுக்குள் வீட்டுக் கடனை அடைத்து விடத் துடிக்கின்றனர். இதில் முதல் முறையாக வீடு அல்லது பிளாட் வாங்க விரும்புவோர் கீழ்கண்ட 5 விஷயங்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
அணுகல்: இது ரொம்பவே முக்கியமான விஷயமாகும். ஊருக்கு ஒதுக்குப்புறமாக வீட்டை வாங்கிவிட்டு பின்னர் ஆத்திர அவசரத்துக்கு மருத்துவமனைக்கோ அல்லது வேறு இடங்களுக்குச் செல்வதற்கோ சிரமப்பட்டுவிடக் கூடாது. உங்கள் புதிய பிளாட் அல்லது அபார்ட்மெண்ட் அக்கம்பக்கத்தில் உள்ள முக்கிய பகுதிகளிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை கவனியுங்கள்.
போக்குவரத்து வசதிகள் எளிதில் கிடைக்குமா? உங்கள் பணியிடம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, உள்ளூர் சந்தைகள் போன்றவை எவ்வளவு தூரம் உள்ளது என்பதைப் பார்த்து அவற்றுக்கு அருகில் இருக்கும்படி தேர்வு செய்ய வேண்டும்.
அடிப்படை வசதிகள்: பல அப்பார்ட்மென்ட் வளாகங்கள் கிளப்ஹவுஸ், நீச்சல் குளம், பார்க்கிங் வசதிகள், கேரேஜ் போன்ற வசதிகளை வழங்குகின்றன. அது உங்களுக்குத் தோதுப்பட்டால் மட்டும் அங்கு உங்கள் வீட்டைத் தேர்ந்தெடுங்கள்.
பாதுகாப்பு: உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். நீங்கள் வீடு வாங்கும் பகுதி பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கெளரவமான, சுகாதாரமான இடங்களில் வீடுகளை வாங்குங்கள். காலனியில் பாதுகாப்பு அமைப்பு, ரோந்து காவலர்கள் வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.
எதிர்கால வளர்ச்சி: நீங்கள் வீடு அல்லது ஃபிளாட் வாங்கப் போகும் பகுதியின் எதிர்கால மதிப்பு எப்படி இருக்கும்? எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளதா? என்பதை ஆலோசித்து வாங்குங்கள். வீடு வாங்கும் போது இதுவும் ஒரு முக்கியமான விஷயமாகும். தேவைப்படும்போது எளிதாக விற்க ஏதுவாக இருக்க வேண்டும்.
மறுவிற்பனை மதிப்பு: எதிர்காலத்தில் எப்போதாவது, நீங்கள் குடியிருப்பை விற்க விரும்பினால், நீங்கள் ஒரு நல்ல மறுவிற்பனை மதிப்பைப் பெறுவீர்கள் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் உங்கள் ஃப்ளாட்டின் சந்தை மதிப்பை கணக்கிட உதவுவார்கள்.
Story Written by: I. Jayachandran


Click it and Unblock the Notifications