சர்வதேச அளவில் மின்சார வாகன விற்பனையில் முன்னிலையில் இருக்கக்கூடிய சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் தன்னுடைய ஆலையை நிறுவ இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அந்த நிறுவனம் அதனை மறுத்திருக்கிறது.
உலக அளவில் மின்சார வாகன பயன்பாடு நாள்தோறும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் மின்சார வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் பெரிய அளவில் லாபம் கண்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை சர்வதேச அளவில் மின்சார கார்கள் என்றாலே டெஸ்லா நிறுவனம் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்லாவை பின்னுக்கு தள்ளி சீனா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மின்சார கார்கள் விற்பனையில் முதல் நிறுவனமாக உயர்ந்து இருக்கிறது பிஒய்டி.

சீனா மட்டுமில்லாமல் ஐரோப்பிய சந்தையையும் ஈசியாக கைப்பற்றி இருக்கிறது. இந்தியாவிலும் இந்த நிறுவனம் தன்னுடைய மின்சாரக் கார்களை விற்பனை செய்து வருகிறது. சீனாவில் தயாரிக்கப்படும் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. கூடிய விரைவில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய மின்சார கார்களை விற்பனை செய்ய இருக்கிறது. அது மட்டும் இன்றி இந்தியாவில் தன்னுடைய உற்பத்தி ஆலையையும் நிறுவ இருக்கிறது.
எனவே டெஸ்லாவின் போட்டியாளரான பிஒய்டி நிறுவனமும் இந்தியாவில் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான வாய்ப்புகளை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகின. சில தினங்களுக்கு முன்பு வெளியான செய்தியில் பிஒய்டி நிறுவனம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் தன்னுடைய மின்சார கார் உற்பத்தி ஆலையை அமைக்க இருக்கிறது என தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை நிறுவனம் தற்போது மறுத்திருக்கிறது.
தங்கள் நிறுவனம் இந்தியாவில் புதிதாக எந்த ஒரு உற்பத்தி ஆலையும் நிறுவவில்லை என தெரிவித்துள்ளது. புதிதாக தங்கள் நிறுவனம் இந்தியாவில் முதலீடு மேற்கொள்ளப் போவதில்லை என கூறி இருக்கும் பிஒய்டி, தற்போதைய நிலைப்பாடு சீனாவில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை என்பதுதான் அதில் நாங்கள் தொடர்ந்து நீடிப்போம் என தெரிவித்துள்ளது.
புதிய ஆலை எதையும் இந்தியாவில் நிறுவுவதற்கு திட்டமிடவில்லை என விளக்கம் தந்துள்ளது. பிஒய்டி நிறுவனம் சீனாவை சேர்ந்த நிறுவனமாக இருப்பதால் அவ்வளவு எளிதாக அந்த நிறுவனத்தால் இந்தியாவில் முதலீடு செய்து விட முடியாது. இந்தியாவை சேர்ந்த நிறுவனத்துடன் கூட்டு நிறுவனத்தை அமைத்து தான் செயல்பட முடியும்.
இந்தியாவிலேயே உற்பத்தி ஆலையை நிறுவும்போது பிஒய்டி நிறுவனத்தின் கார்கள் இன்னும் குறைவான விலைக்கு விற்பனை செய்ய முடியும். அதாவது தற்போது இறக்குமதி செய்து விற்பனை செய்வதால் இறக்குமதிக்கான தொகையையும் செலுத்த வேண்டியிருக்கிறது. எனவே உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தால் இந்த நிறுவனத்தின் கார் விற்பனை இன்னும் அதிகமாகும். ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை நாங்களே வெளியிடுவோம் என்றும் எந்த யூகங்களையும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளது .


Click it and Unblock the Notifications