அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் தன்னுடைய மின்சார கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த பிராண்டுகள் எலான் மஸ்கின் டெஸ்லாவிற்கு பெரும் போட்டியாக இருக்கக்கூடிய நிலையில் சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் இந்திய சந்தையில் பெருமளவில் தங்களுடைய விற்பனையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு இருக்கிறதாம்.
5 ஆண்டுகளுக்கு பின்பு தான் இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவு மீண்டும் மலர்ந்து வருகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சீனாவை சேர்ந்த பி ஓய் டி நிறுவனம் இந்திய சந்தையில் பெருமளவில் தங்களுடைய மின்சார வாகன விற்பனையை கொண்டு வருவதற்கு முடிவு செய்து இருக்கிறது. இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவு மீண்டும் மலர்ந்து வருவது இரு நாடுகளுக்கும் இடையேயான பயண கட்டுப்பாடுகளில் விதிக்கப்பட்டு இருக்கும் தளர்வுகள் ஆகியவை நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் எளிமையாக இந்தியாவிற்கு வருகை தர வழி வகை செய்துள்ளது.

ஏற்கனவே மூத்த நிலையில் இருக்கக்கூடிய மேலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் இந்தியாவிற்கு வருகை தருவதற்கான விசா விண்ணப்ப நடைமுறைகளை தொடங்கி விட்டார்களாம். இது மட்டும் இன்றி இந்தியாவில் பிஒய்டி நிறுவனம் புதிய ரக மின்சார எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இந்த காரினை இந்திய சந்தையில் குறைந்த விலைக்கு கொண்டு வரவும் மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நேரடி போட்டி போடவும் முடிவு செய்து இருக்கிறதாம் .
கடந்த 2023 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கோரி இருந்தது பிஒய்டி. ஆனால் அந்த சமயத்தில் இருநாட்டு உறவில் இருந்த விரிசல் காரணமாக மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை. எனவே தற்போது பிஒய்டி அதிகாரிகள் இந்தியாவிற்கு வருகை தந்தால் நிச்சயமாக இந்தியாவில் தங்களுடைய உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான பணிகளை தீவிரப் படுத்துவார்கள் என சொல்லப்படுகிறது. இதற்காக மத்திய அமைச்சர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு இந்தியாவிலேயே உற்பத்தி ஆலை நிறுவி விட்டால் பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் மின்சார வாகன சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நிறுவனமாக மாறும். தற்போது இந்தியாவில் உள்ளூர் நிறுவனங்கள் இல்லாமல் டெஸ்லா, வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் மின்சாரக்கார விற்பனையை தீவிர படுத்தியிருக்கின்றன.
பிஒய்டி இறக்குமதி செய்து தான் கார்களை விற்பனை செய்கிறது .ஆனால் இந்தியாவிலேயே உற்பத்தி செய்து விற்பனை செய்தால் குறைந்த விலைக்கு விற்பனை செய்து அதிக வாடிக்கையாளர்களை பிடிக்க முடியும் என பிஒய்டி நிறுவனம் நம்புகிறது.


Click it and Unblock the Notifications