சீனாவின் முன்னணி எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான BYD அடுத்து அறிமுகம் செய்ய உள்ள சூப்பர் கார் 'யாங்வாங் யூ9' இன் அற்புதமான திறன்களை வெளிப்படுத்தும் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், சாலையில் இருக்கும் குழிகளை எளிதாக தாண்ட வாகனத்தில் புதிதாக "குதிக்கும் சஸ்பென்ஷன்" அம்சம் கொண்டு வந்துள்ளது.
சீனா தனது கார் உற்பத்தியிலும், தயாரிப்பிலும் தொடர்ந்து புதுமைகளை கொண்டு வரும் வேளையில், இது புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது. அதுவும் சூப்பர்கார் பிரிவில் கொண்டு வரப்பட்டு உள்ள இந்த புது வசதி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாங்வாங் யூ9 கார் வேகமாக செல்லும் போதே 6 மீட்டர் நீளமுள்ள குழியை தாண்டி குதிக்கும் புதிய அம்சத்தை பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட வீடியோ மூலம் உலகிற்கு காட்டியுள்ளது. இந்த புதுமையான சஸ்பென்ஷன் கார் வல்லுனர்கள் மத்தியிலும், கார் வெறியர்கள் மத்தியிலும் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
யாங்வாங் யூ9 இதுவரை தயாரிக்கப்பட்ட மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சூப்பர் எலக்ட்ரிக் கார்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நான்கு மோட்டார் அனைத்து சக்கர இயக்க அமைப்பு, 150 கிலோவாட்-மணி பேட்டரி பேக் மற்றும் 2 வினாடிகளுக்குள் 0-60 மைல் வேகம் அடையும் திறன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
இது ஒருப்பக்கம் இருக்க BYD புதிதாக 7,000 வாகனங்கள் கொள்ளளவு கொண்ட புதிய கார் கப்பலை சமீபத்தில் வாங்கியுள்ளது. இந்த கப்பலில் ஓரே நேரத்தில் 7000 கார்களை உலகும் முழுவதும் கொண்டு செல்லும் திறன் கொண்டதாக உள்ளது. இதனால் சீனாவில் தயாரிக்கப்படும் BYD கார்கள் தயாரிக்கப்பட்டு சுடசுட உலக நாடுகளுக்கு சொந்த கப்பல் மூலம் டெலிவரி செய்யப்படும்.

இந்த பிரம்மாண்டமான கார் கேரியரை வாங்குவது BYD இன் அதிரடியான விரிவாக்கத் திட்டங்களையும், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதன் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான அதன் புதிய முயற்சியை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications