2024-ஆம் ஆண்டு முதல் 2029-ஆம் ஆண்டு வரை பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் (PMAY-G) திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சமவெளிப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு ரூ. 1.2 லட்சம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மலைப் பகுதிகளில் ரூ. 1.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி கூடுதல் வீடுகள் கட்டப்படும். இதன் மூலம் 10 கோடி மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் திட்டத்திற்கான மொத்த செலவு 2024-ஆம் ஆண்டு முதல் 2029-ஆம் ஆண்டு வரை ரூ.3,06,137 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ. 2,05,856 கோடியும், மாநில அரசுகளின் பங்கு ரூ. 1,00,281 கோடியும் ஆகும்.
மார்ச் 31, 2024 வரை முடிக்கப்படாத மீதமுள்ள 35 லட்சம் வீடுகள் முந்தைய திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கான 2.95 கோடி வீடுகளை எட்டுவதற்கு கட்டி முடிக்கப்படும் என்று அரசாங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - அர்பன் (PMAY-U) 2.0 திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் 1 கோடி நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு குறைந்த விலையில் வீடு கட்டுதல், வீடு வாங்குதல் அல்லது வாடகைக்கு எடுத்துக் கொள்ள நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 10 ஆண்டுகளில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகள் கட்டப்பட்டன. இப்போது 3 கோடி புதிய வீடுகளை கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 2 கோடி கிராமப்புறங்களுக்கும், 1 கோடி நகர்ப்புறங்களுக்கும், என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
அரசாங்கம் வட்டி மானியத் திட்டத்தையும் இதற்காக அறிவித்தது, இது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கு மானியத்தை வழங்கும்.
ரூ. 35 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகளுக்கு ரூ. 25 லட்சம் வரையிலான கடன் பெறுபவர்களுக்கு, முதல் ரூ. 8 லட்சம் கடனுக்கு 12 ஆண்டுகள் வரை 4 சதவிகித வட்டி மானியம் வழங்கப்படும். தகுதியுள்ள பயனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 1.8 லட்சம் மானியம் 5 ஆண்டு தவணைகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PM ஆவாஸ் யோஜனா திட்டம் என்பது அரசாங்கத்தின் முக்கிய திட்டமாகும். சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்ட மக்கள், நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம்.


Click it and Unblock the Notifications