: உலகன் புகழ்பெற்ற சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான மாண்டலஸ் நிறுவனம் ஆந்திராவில் உள்ள தங்களுடைய கேட்பரி சாக்லேட் தயாரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாண்டலஸ் என்பது அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரக்கூடிய உலக பிரசித்தி பெற்ற தின்பண்ட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் கீழ் தான் கேட்பரி சாக்லேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது .

கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் மாண்டலஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ஆந்திராவின் ஸ்ரீ சிட்டியில் கேட்பரி சாக்லேட் ஆலையை நிறுவி இருக்கிறது. இந்த நிலையில் ஸ்ரீ சிட்டியில் உள்ள சாக்லேட் ஆலையை கூடுதலாக 1600 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப் போவதாக மாண்டலஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தங்களுடைய சர்வதேச அளவிலான தொழில் விரிவாக்கத்தில் ஸ்ரீ சிட்டியில் இருக்கும் உற்பத்தி ஆலை முக்கிய பங்கு வகிக்கும் என மாண்டலஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிறுவனம் 130 இடங்களில் சாக்லேட் உள்ளிட்ட தின்பண்டங்களை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்கிறது.
இது தொடர்பாக மாண்டலஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவரான வெங்கட வென்பள்ளி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் மாண்டலஸ் நிறுவனத்தை பொருத்தவரை ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டி பகுதியில் இருக்கும் ஆலை தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய உற்பத்தி ஆலை என தெரிவித்துள்ளார்.
தற்போது ஆண்டுக்கு ஒரு லட்சம் டன்கள் சாக்லேட் உற்பத்தி செய்யக்கூடிய ஆலையாக இது இருக்கிறது. கூடிய விரைவில் இதனை நாங்கள் விரிவாக்கம் செய்ய போகிறோம் எனவே அதிக எண்ணிக்கையிலான சாக்லேட் இங்கே தயாரிக்க இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். ஸ்ரீ சிட்டியில் உள்ள கேட்பரி உற்பத்தி ஆலையில் எட்டு வகையான கேட்பரி சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
டைரி மில்க், 5 ஸ்டார் உள்ளிட்டவை இங்கு பிரதானமாக தயார் செய்யப்படும் சாக்லேட்டுகள் ஆகும். தற்போது இந்த ஆலையில் கூடுதலாக 1600 கோடி முதலீடு செய்து அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இதன் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த இருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது.
தற்போதைய சூழலில் இந்தியாவில் விற்பனையாக கூடிய நான்கில் மூன்று கேட்பரி டைரி மில்க் சாக்லேட்டுகள் ஸ்ரீ சிட்டியில் உள்ள ஆலையில் தான் தயாரிக்கப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டில் தான் மாண்டலஸ் நிறுவனம் ஸ்ரீ சிட்டியின் சாக்லேட் உற்பத்தி ஆலையை அமைத்தது. அதுமட்டுமின்றி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களிலும் கேட்பரி நிறுவனத்தின் சாக்லேட் உற்பத்தி ஆலைகள் அமைந்துள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications