அமெரிக்க அதிபராக பதவி ஏற்றது முதலே டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளுடன் மோதல் போக்கையே கையாண்டு வருகிறார். முதல் ஓராண்டு கால பதவி காலத்தில் வர்த்தக ரீதியான மோதல்களை தொடுத்தார். இரண்டாவது ஆண்டில் நேரடியாகவே போரிலேயே இறங்கிவிட்டார். முதலில் வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுத்தார், பின்னர் கிரீன்லாந்தை கைப்பற்ற போவதாக அறிவித்தார்.
இந்த சூழலில் ஈரான் மீது ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேலுடன் இணைந்து தீவிரமாக போர் நடத்தி வருகிறார். இது அமெரிக்க மக்கள் மத்தியில் அவருடைய செல்வாக்கு சரிவடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இதற்கிடையே ஏராளமான மக்கள் டிரம்ப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விரும்புவதாக தி டெய்லி டைஜஸ்ட் என்ற செய்தி தளம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. குறிப்பாக அவருடைய சொந்தக் கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்தவர்களே டிரம்பை இம்பீச்மெண்ட் செய்துவிட வேண்டும் என கூறுகிறார்கள் என தி லேக் ரீசர்ச் பார்ட்னஸ் அமைப்பு நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

கருத்து கணிப்பில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள் , டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்களாம். மார்ச் 26 ஆம் தேதியிலிருந்து மார்ச் 30ம் தேதி வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் 56 சதவீதம் பேர் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் 40 சதவீதம் பேர் அவரே தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்களாம்.
அதாவது கிட்டதட்ட பாதிக்கும் அதிகமான மக்கள் அதிபர் பதவியில் டிரம்ப் இருக்கக் கூடாது என எண்ணுகின்றனர் என அந்த அமைப்பின் ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதில் வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்கள் குடியரசு கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களாகவே இருக்கின்றனர். அதாவது டிரம்பின் கட்சி ஆதரவாளர்கள் என்றும் அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.
டிரம்ப் கடந்த ஆண்டு பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்தார். இதனால் அமெரிக்காவில் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வு கண்டிருக்கிறது. ஏற்கனவே பொருளாதார மந்த நிலை வேலை வாய்ப்பின்மை என மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் அவர் அதிகமான பணத்தை செலவு செய்து ஈரான் போரில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் அவர் மீதான மதிப்பு குறைவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
இருந்தாலும் அமெரிக்க அதிபர் பதவியில் இருப்பவர்களை அத்தனை எளிதாக பதவி நீக்கம் செய்து விட முடியாது. அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் மிகவும் இந்த நடைமுறையை மிகவும் சிக்கலானதாக வைத்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.இதற்கு இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு டிரம்பை பதவி நீக்க அனுமதி கிடைக்க வேண்டும். அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் அவர் மீது விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் இல்லையென்றால் மீண்டும் அதிபர் பதவியிலேயே தொடர்வார்.


Click it and Unblock the Notifications