காலம் காலமாக தன்னுடைய சொத்து யாரைச் சேர வேண்டும் என்பதற்கு சாட்சியாக சிலர் உயில் எழுதி வைப்பார்கள். ஆனால் ஒரு குடும்பத்தில் தலைவராக இருக்கும் தந்தை உயில் எழுதாமல் இறந்து விடுகிறார் என்றால்.. அவருடைய சொத்து யாருக்கு செல்ல வேண்டும் என்பதில் பல சிக்கல்கள் எழும். சமீபத்தில் இதே பிரச்சினை ஒரு குடும்பத்திற்கு நடந்துள்ளது. அதற்கு என்ன செய்வது என்று தெரியாத அந்த நபர் ஆஸ்க் வாலட் வைஸ் என்ற கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அந்த கேள்வி என்ன என்பதை பார்ப்போம்.
ஒருவர் தன்னுடைய சொத்தை யாருக்கு வழங்க வேண்டும் என்பதற்கு உயில் எழுதாமல் இறந்துவிட்டார். அவருக்கு ஒரு மனைவி, 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். தந்தையின் சொத்தில் மகளுக்கு சம பங்கு உண்டு என்று இந்திய சட்டம் சொல்கிறது. ஆனால் மகள் தாய்க்கு இருக்கும் பங்கிலும் பங்கு கேட்கிறார். இந்த சூழ்நிலையில் தாய் தனக்குள்ள பங்கை 2 மகன்களுக்கும் பிரித்து வழங்க முடியுமா? சொத்து இன்னும் தந்தை பெயரிலேயே இருக்கிறது. அப்படியானால் இது செல்லுபடியாகுமா?

இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1956-இன் கீழ் ஒருவர் உயில் எழுதாமல் இறந்து விட்டால் அவருடைய சொத்தை வாரிசுகளுக்கு சம பங்காக பிரித்து வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் இறந்தவருக்கு நான்கு வாரிசுகளாக கருத்தில் கொள்ளப்படும். அவருடைய மனைவி, முதல் மகன், இரண்டாவது மகன் மற்றும் மகள்.
இதை வைத்துப் பார்க்கும்போது இறந்தவரின் சொத்தில் நான்கில் ஒரு பங்காக பிரித்து ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும். அதாவது இறந்தவருடைய மனைவிக்கு 4-இல் ஒரு பங்கு (1/4) , முதல் மகனுக்கு 4-இல் ஒரு பங்கு (1/4), இரண்டாவது மகனுக்கு 4-இல் ஒரு பங்கு (1/4) மற்றும் மகளுக்கு 4-இல் ஒரு பங்கு (1/4) வழங்க சட்டம் அனுமதிக்கிறது.
இறந்தவருடைய சொத்தில் அவருடைய மனைவிக்கு சேரும் 1/4 பங்கு சொத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும். தந்தையின் மறைவுக்கு பிறகு தாய்க்கு வரும் சொத்தை தனக்கு வேண்டும் என்று கேட்க மகனுக்கோ அல்லது மகளுக்கோ எந்த உரிமையும் கிடையாது.
அந்த தாய் நினைத்தால் தன்னுடைய ஒன்றில் நான்கு பங்கு சொத்தை தங்களுடைய இரு மகன்களுக்கும் உயில் எழுதி வைக்கலாம். இல்லாத பட்சத்தில் மகளுக்கும் எழுதிக் கொடுக்கலாம். அவர் முழு மனதுடன் மகளுக்கு வழங்காமல் மகன்களுக்கு சொத்தை வழங்கினாலும் அது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும்.


Click it and Unblock the Notifications
