ரிஸ்க் எடுக்க விரும்பாத பெற்றோர்கள் இன்றளவும் இந்தத் திட்டத்தை தேர்ந்தெடுத்து சேமித்து வருகின்றனர். ஆனால் எல்லோராலும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்க முடியாது. குழந்தையின் வயது, அவர்கள் வசிக்கும் இடம் மற்றும் கணக்கை நிர்வகிப்பவர்களைப் பொறுத்து தான் இதில் சேர முடியும்.
இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் எந்தத் திட்டத்தில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஃபிக்சட் டெபாசிட், நேஷனல் பென்ஷன் ஸ்கீம், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இப்படி எதில் வேண்டுமானாலும் தங்கள் பணத்தை போட்டு லாபம் பார்க்கலாம், ஆனால் NRI என்று சொல்லப்படுகிற வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எல்லா திட்டத்திலும் முதலீடு செய்ய அனுமதி இல்லை. சில திட்டங்களில் அவர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டே சேமிக்கலாம். ஆனால் சில திட்டங்களில் அப்படி செய்ய முடியாது.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் யாரெல்லாம் சேரலாம்?: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஒருவர் சேர வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். கணக்கு தொடங்கப்படும் பெண் குழந்தை கண்டிப்பாக இந்தியாவில் இருக்க வேண்டும். பெண் குழந்தையின் சார்பாக அவருடைய தாய் அல்லது தந்தை, பெற்றோர் இல்லாத பட்சத்தில் சட்டப்பூர்வ பாதுகாவலர் கணக்கு தொடங்கலாம்.
கணக்கு தொடங்கப்படும் போது அந்த குழந்தைக்கு 10 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது. அதாவது 10 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் மட்டுமே இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க முடியும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைய முடியுமா?: இந்தியா போஸ்ட் இணையதளத்தின் தகவல் படி இந்தியாவில் வசிக்கும் குடிமக்களுக்கு மட்டுமே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதி உள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இக்கணக்கை தொடங்க முடியாது.
இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு பழைய வரி முறையின் கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும். ஒரு சில திட்டங்களுக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்தியாக வேண்டும். ஆனால் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் செய்யப்படும் முதலீடு, அதற்கு கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வு தொகை ஆகிய எதற்குமே வரி இல்லை. மூன்றிற்கும் வரி விலக்கு வழங்கப்படுகிறது.
எவ்வளவு ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும்?: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைந்த ஒருவர் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். ஆனால் 21 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்த திட்டம் முடிவிற்கு வரும். 15 ஆண்டுகளுக்கு வருடத்திற்கு ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம்.
15 ஆண்டுகள் வரை நிலையான தொகையை முதலீடு செய்து கொண்டே வரவேண்டு.ம் அதன் பிறகு மீதம் இருக்கும் 6 ஆண்டுகளுக்கு எந்த ஒரு முதலீடும் செய்யாமல் வட்டி கிடைக்கும்.
வட்டி விகிதம்: சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசு காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கும். அதாவது ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒருமுறை வட்டியில் மாற்றம் செய்யப்படும். ஒரு சில நேரங்களில் தொடர்ந்து 2 காலாண்டுகள் அல்லது 3 காலாண்டுகள் வரை வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படாமலும் இருக்கலாம்.தற்போது இந்த திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
முதலீடு செய்யத் தவறினால் என்ன நடக்கும்?: ஒரு சில ஆண்டுகளுக்கு பெற்றோர்கள் பணத்தை முதலீடு செய்யவில்லை என்றாலும் கணக்கு மூடப்படாமல் இருக்கும். ஆனால் தவறவிட்ட ஒவ்வொரு ஆண்டுக்கும் முதலீட்டு தொகையோடு சேர்த்து 50 ரூபாய் அபராதம் செலுத்தி வரவு வைக்க வேண்டும்.
பாதியில் பணம் எடுக்கலாமா?: குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு அல்லது அந்த குழந்தை 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இருந்து 50% வரை கல்வி செலவுக்காக பணம் எடுக்கலாம். மொத்தமாகவும் எடுக்கலாம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை மாதத் தவணைகளாகவும் பெற்றுக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
