இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களின் வசதிக்கு ஏற்ப ஒரு வங்கியில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர். சிலர் பொதுத்துறை வங்கிகளிலும், சிலர் தனியார் துறை வங்கிகளிலும் கணக்கு தொடங்கியுள்ளனர். இந்தியாவில் உள்ள நபர்கள் எத்தனை வங்கி கணக்குகளை வைத்திருக்கலாம் என்ற கேள்வி எழுகிறது. எனவே இந்தப் பதிவில் இந்தியாவில் வசிக்கும் ஒருவர் எத்தனை வங்கி கணக்குகளை வைத்திருக்க முடியும் என்று பார்ப்போம்.
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கைகளின் படி ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பது சட்டவிரோதமானது மற்றும் அபராதத்திற்கு உட்பட்டது என்ற செய்திகள் பரவத் தொடங்கியுள்ளன. இந்த செய்திகளை கண்டு பீதி அடைய வேண்டாம். ஏனெனில் இவை முற்றிலும் போலியானவை. இந்தியாவில் உள்ள ஒருவர் எத்தனை வங்கி கணக்குகளை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளிலும் கணக்கு தொடங்கி நிர்வகிக்கலாம். அதற்கு ரிசர்வ் வங்கி எந்தவித அபராதத்தையும் செயல்படுத்தவில்லை.

பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (PIB) சமீபத்தில் போலியாக பரவும் செய்திகள் குறித்த போஸ்ட்டை வெளியிட்டது. PIB தனது அதிகாரபூர்வ X தளத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் வங்கி கணக்குகள் வைத்திருக்கும் மக்கள் மீது அபராதம் விதிப்பதாக ஆர்பிஐ எந்த வழிகாட்டுதல்களையும் வெளியிடவில்லை என்று தெரிவித்திருக்கிறது. மேலும் இதுபோன்ற பொய்யான தகவல்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
பல வங்கி கணக்குகளை வைத்திருக்கும் தனி நபர்களுக்கு அபராதம் விதிக்க போவதாக ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது போன்ற சித்தரிக்கப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே மக்கள் இதைக் கண்டு அச்சமடைய வேண்டாம். மேலும் அவசரப்பட்டு உங்கள் கணக்குகளை டி-ஆக்டிவேட் செய்ய வேண்டாம் என்பதற்காகத் தான் PIB இந்த பதிவை வெளியிட்டுள்ளது.
மற்றபடி ஒரு நபர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் வங்கி கணக்குகளை வைத்திருப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப மக்கள் வங்கி கணக்குகளை திறந்து நிர்வகிக்கலாம். ஆனால் அதிகபட்சமாக 2 முதல் 3 வங்கி கணக்குகள் வரை வைத்திருக்கும் படி நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் எந்த நோக்கமும் இல்லாமல் அதிக அளவில் வங்கி கணக்குகளை வைத்திருப்பது நிதி மோசடிக்கு காரணமாகலாம்.
மேலும் ஒவ்வொரு கணக்கிலும் குறைந்தபட்ச பாலன்ஸை வைத்திருக்க வேண்டும்.அப்படி பராமரிக்கத் தவறினால் அதற்கு வங்கிகள் அபராதத்தை விதிக்கலாம். அதோடு மோசடிக்காரர்கள் பயன்படுத்தாத வங்கிகளை குறிவைத்தே பணமோசடியில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும் பயன்படுத்தாத வங்கி கணக்குகளின் அறிக்கைகளை சரி பார்க்க மாட்டோம் அல்லவா.. எனவே இது போன்ற கணக்குகள் மோசடிக்காரர்களுக்கு வசதியான ஒன்றாக மாற வாய்ப்புள்ளது. வங்கி கணக்குகளை வைத்திருக்க எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என்றாலும்.. முடிந்த வரையில் 2 முதல் 3 வங்கி கணக்குகளை வைத்திருப்பது பரிந்துரைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications