இந்தியாவின் புகழ்பெற்ற ZOHO நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு தொடர்ச்சியாக இந்திய பொருளாதாரம், தொழில் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்த தனது கருத்துகளை சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் பெரிய அளவிலான தொழில்நுட்ப நிறுவனங்கள் என்ற பிரிவில் இந்தியாவையும் சீனாவையும் ஒப்பீடு செய்து அவர் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
இந்தியா 100 பில்லியன் டாலர்கள் வருமானம் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என ZOHO நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார். எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ளார். அதில் இந்திய நிறுவனங்கள் சந்தை மதிப்பீட்டில் கவனம் செலுத்தாமல் வருவாயில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

சீனாவில் கடந்த 20 ஆண்டுகளில் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல உருவாகியுள்ளன என்பதை உதாரணமாக குறிப்பிட்டுள்ள ஸ்ரீதர் வேம்பு, இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க இத்தகைய நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து 100 பில்லியன் டாலர் ( மதிப்பீட்டில் இல்லை வருவாயில்) கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்க முடியுமா? நாம் மக்களை மேம்படுத்த வேண்டும் எனில் இத்தகைய பல நிறுவனங்கள் தேவை. இப்படிப்பட்ட உலக சாம்பியன் நிறுவனங்கள் பலவற்றை சீனா கொண்டுள்ளது .கடந்த 20 ஆண்டுகளில் சீனா அவற்றை உருவாக்கியுள்ளது என ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இடத்திற்கு நாம் செல்ல வேண்டும் எனில் நமது இந்திய நிறுவனங்கள் சந்தை மதிப்பீட்டில் கவனம் செலுத்துவதை விட வேண்டும் என ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். சந்தை மதிப்பீட்டில் கவனம் செலுத்துவதை விடவில்லை என்றால் இது சாத்தியமில்லை என அவர் கூறியுள்ளார்.
நீண்ட பயணத்திற்கு தயாராக இருக்கும் மற்றும் குறுகிய கால நோக்கில் தங்கள் செலவுகளை ஈடு செய்து கொண்டே நீண்ட கால இலக்கையும் சமன் செய்யக்கூடிய திறமையான தொலைநோக்கு பார்வை கொண்ட நபர்களால் மட்டுமே இது சாத்தியம் என அவர் தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள் மதிப்பீட்டில் மிகை கவனம் செலுத்தினால் நீண்ட கால நோக்கில் அவர்களின் கவனம் திசை திரும்பிவிடுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பங்கு குமிழ்கள் நம்மை இலக்கிலிருந்து திசை திருப்பி விடுகின்றன எனவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்தில் நிறுவன மதிப்பீட்டை மேம்படுத்துவதில் கவனம் திரும்பி நிறுவன நிர்வாகம் பங்கு விலையில் கவனம் செலுத்த துவங்குகிறது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
வளர்ந்து வரக்கூடிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை ஐபிஓ வெளியீடு செய்து பொது நிறுவனமாக மாற்றி பங்குச்சந்தையில் பட்டியலிடும்போது அவர்களின் கவனம் முழுக்க முழுக்க அதிலேயே நின்று விடுகிறது என ZOHO நிறுவனம் ஏன் ஐபிஓ வெளியீடு செய்து பங்குச்சந்தையில் வரவில்லை என கேட்கப்பட்ட கேள்விக்கு ஸ்ரீதர் வேம்பு இந்த பதிலை தெரிவித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications