தினசரி அடிப்படையில் எந்த பொருள் வாங்கினாலும் சரி பணத்தை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அடிக்கடி பயன்படுத்தும் இந்திய ரூபாய் நோட்டில் இருக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்களை நாம் கவனிப்பதே இல்லை. அப்படி ஒரு சிறப்பான விஷயம் நாம் பயன்படுத்தும் 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் ஓரங்களில் இருக்கிறது. ரூபாய் நோட்டின் டிசைனில் இந்த கோடுகள் ஏன் இருக்கிறது?, இதன் பயன்பாடு என்ன? என்பதைத் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் ஓரங்களில் மேடான கருப்பு நிறக் கோடுகள் இருக்கும். இதை யாரெல்லாம் கவனித்திருக்கிறீர்கள்? நீங்கள் இன்னும் கவனித்ததில்லை என்றால்.. உங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டை எடுத்துப் பாருங்கள். இவை பார்ப்பதற்கு சாதாரண டிசைன் போல தோன்றலாம்.

ஆனால் இதன் பின்னால் ஒரு முக்கியமான பயன்பாடு இருக்கிறது. இந்த பதிவை படிப்பவர்கள் உடனே உங்களுடைய பாக்கெட்டில் இருக்கும் 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து அதன் ஓரங்களில் விரல்களால் தொட்டுப் பாருங்கள். தொடும் போது உங்களுக்கு சிறிய மேடான கோடுகள் தென்படும். இந்த கோடு ஒவ்வொரு நோட்டுக்கும் ஏற்ப கொடுக்கப்பட்டிருக்கும்.
100 ரூபாய் நோட்டுகளின் ஓரங்களில் மேடான கோடுகள் மட்டும் இருக்கும். அதுவே 200 ரூபாய் நோட்டாக இருந்தால்.. அதன் ஓரங்களில் மேடான கோடுகளுடன் வட்ட வடிவ குறியீடுகளும் இருக்கும். 500 ரூபாய் நோட்டுகளில் மேடான சாய்ந்த கோடுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஏன் இந்திய ரூபாயில் இப்படி ஒரு டிசைன் இருக்கிறது தெரியுமா?: முக்கியமாக பார்வை திறனில் பிரச்சனை இருக்கும் நபர்கள் ரூபாய் நோட்டை தொட்டுணர்ந்து பார்த்து அதன் மதிப்பை தெரிந்து கொள்ளத்தான் இத்தகைய டிசைனை ஆர்பிஐ செய்துள்ளது.
விரல்களால் இந்த மேடான கோடுகளை தடவி பார்த்தாலே அதன் மதிப்பு என்ன என்பதை தெரிந்து கொண்டு அவர்களால் செலவு செய்ய முடியும். பார்வையில் பிரச்சனை இல்லாமல் இருப்பவர்களே சில நேரம் தடுமாறி பணத்தை விட்டு விடுகின்றனர். அப்படி இருக்கையில் பார்வை குறைபாட்டுடன் சிரமப்பட்டு உழைக்கும் நபர்களுக்கு அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் இந்த டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமல்ல நம் இந்திய ரூபாய் நோட்டுகளில் இன்னும் பல சுவாரசியமான விஷயங்கள் இருக்கிறது. அடுத்த முறை உங்கள் கைகளில் 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் போது அதன் ஓரங்களை தொட்டுணர்ந்து பாருங்கள்!


Click it and Unblock the Notifications
