இணையப் பொழுதுபோக்கை மொத்தமாகப் புரட்டிப்போட்ட சீனாவின் டிக்டாக் செயலி குறுகிய காலத்தில் உலகம் முழுவதும், அதிலும் குறிப்பாக அனைத்துத் தரப்பு மக்களையும் தனது வாடிக்கையாளராக மாற்றி விஸ்வரூப வளர்ச்சியை அடைந்தது. டிக்டாக் செயலிக்கு முதல் முட்டுக்கட்டை போட்டது இந்தியா.
கொரோனா தொற்று துவக்க காலத்தில் இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்திய அரசு, சீன செயலிகளை மக்களின் தனிநபர் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மொத்தமாகத் தடை செய்தது. இதேவேளையில் அமெரிக்கா அரசு அதிகாரிகளும் டிக்டாக் செயலி மூலம் சீன அரசு அமெரிக்கர்களின் தரவுகளைத் திருடி வருவாதாகக் குற்றம்சாட்டி வந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் பல மாநில அரசுகள் டிக்டாக் செயலிகளை அரசு கருவிகளில் பயன்படுத்தக் கூடாது என் உத்தரவிட்டு வரும் வேளையில் கனடா மொத்தமாக நாடு முழுவதும் புதிய தடை உத்தரவை வெளியிட்டு உள்ளது.
கனடா அரசு
கனடா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி செவ்வாய்க்கிழமை முதல் எந்தொரு அரசு கருவிகளிலும் டிக்டாக் செயலிகளையோ அல்லது டிக்டாக் இணையத் தளத்தையோ பயன்படுத்தக் கூடாது எனப் புதிய தடை உத்தரவை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் கனடா நாட்டின் மக்களுக்கு டிக்டாக் மீதான நம்பகதன்மை மீது அதிகப்படியான கேள்விகள் வர துவங்கியுள்ளது.
தலைமை தகவல் அதிகாரி
கனடாவின் தலைமை தகவல் அதிகாரியின் மதிப்பாய்வைத் தொடர்ந்து இந்தத் தடை முடிவு எடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தச் செயலி தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான ஆபத்தை அளிக்கிறது என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டிக்டாக் செய்தித் தொடர்பாளர்
இந்த முடிவால் டிக்டாக் நிறுவனம் பெறும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக, வருந்துவதாகவும் டிக்டாக் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பிய ஆணையம் இதேபோன்ற தடையை அறிவித்த நிலையில் தற்போது கனடா அரசு வெளியிட்டுள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோ
டிக்டாக் செயலியில் பாதுகாப்பு குறித்து அதிகளவிலான மாற்றங்கள் தேவை என்றும், பாதுகாப்புக் காரணமாக அரசு கருவிகளில் டிக்டாக்-ஐ பயன்படுத்துவதைத் தடை செய்ய உள்ளதாகப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். இந்தத் திடீர் நடவடிக்கை முதல் படியாக இருக்கலாம், இதுவே நாம் எடுக்க வேண்டிய ஒரே படியாக உள்ளது என்று ஜஸ்டின் ட்ரூடோ திங்களன்று டொராண்டோ பகுதிக்கு அருகில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கூறினார்.
பர்சனல் தகவல்கள்
டிக்டாக் செயலி மக்களின் பர்சனல் தகவல்களை அதிகளவில் பயன்படுத்தியதற்காகவும், சீன அரசாங்கத்துடனான உறவுகளுக்காகவும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஷாட் வீடியோ செயலியான டிக்டாக் சீன நிறுவனமான பைட் டான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானது.
அமெரிக்கா
கடந்த ஆண்டு அமெரிக்காவில் பல மாநிலங்கள் டிக்டாக் செயலிகளை அரசு கருவிகளான லேப்டாப், போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டது. அமெரிக்க அரசு தொடர்ந்து டிக்டாக் குளோபல் பிரிவை தனியாகப் பிரித்து அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உத்தரவிட்டு உள்ளது, ஆனால் டிக்டாக் தொடர்ந்து பல காரணங்களைக் காட்டி தப்பித்து வருகிறது.


Click it and Unblock the Notifications