பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை கனடாவை சேர்ந்த பெரும் பணக்காரர் பிரேம் வாட்ஸாவின் நிறுவனம் கையகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய- கனடரான பிரேம் வாட்ஸா, கனடாவின் வாரன் பஃபெட் என அறியப்படுகிறார். இவருக்கு சொந்தமாக ஃபேர்ஃபேக்ஸ் இந்தியா என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் பங்குகளில் 10 சதவீத பங்குகளை 2116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கையகப்படுத்த இருக்கிறது.

இதன் மூலம் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிலையத்தின் 74% பங்குகள் ஃபேர்ஃபேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் கைவசம் செல்கிறது. சீமென்ஸ் ப்ராஜெக்ட் வென்ச்சர் என்ற நிறுவனம் தன்வசம் இருக்கும் பங்குகளை ஃபேர்ஃபேக்ஸ் இந்தியாவிடம் விற்பனை செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பெங்களூர் சர்வதேச விமான நிலையம் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் இது வரும் காலங்களில் இன்னும் மேம்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் தங்களுடைய முதலீட்டினை அதிகரித்து இருக்கிறோம் என ஃபேர் ஃபேக்ஸ் இந்தியாவின் உரிமையாளர் பிரேம் வாட்ஸா தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் இது தொடர்பாக தங்கள் நிறுவனத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்றும் அதில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் பெரும்பாலான பங்குகளை கையகப்படுத்துவது தொடர்பான முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது ஃபேர் ஃபேக்ஸ் இந்தியா நிறுவனம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் 64 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் உறுதியானால் இது 74 சதவீதமாக அதிகரிக்கும் . பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இந்திய விமான போக்குவரத்து ஆணையமும் கர்நாடக மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக கழகமும் ஒட்டுமொத்தமாக 13 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றன. அது தொடர்ந்து இவர்கள் வசமே இருக்கும் என்றும் மீதமுள்ள பங்குகள் தான் கை மாறுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பெங்களூர் சர்வதேச விமான நிலையம் என்ற ஒரு தனியார் நிறுவனம் தான் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறது. இந்தியாவில் முதன்முறையாக பொது மற்றும் தனியார் பங்களிப்பு என்ற மாடலில் உருவாக்கப்பட்ட விமான நிலையம் என்றால் அது கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம்தான்.
பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் கெம்பகவுடா விமான நிலையத்தை மேம்படுத்துவது, வடிவமைப்பது, கட்டமைப்பது ,மேலாண்மை செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications