இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 2 நாட்களாக நடத்திய நாணய கொள்கை குழு (MPC) கூட்டத்தின் முடிவுகளை இன்று வெளியிட உள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக மாற்றாமல் இருக்கக்கூடும் என்று கணிப்புகள் வெளிவந்தாலும் அமெரிக்க மத்திய வங்கிக்கு முன்னதாக பல கனடா, ஐரோப்பா, சுவிஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் தங்களது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
ஆர்பிஐ ஜூன் மாத நாணய கொள்கை கூட்டத்தில் பணப்புழக்கத்தைக் குறைத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் கவனம் செலுத்தக்கூடும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

ஆர்பிஐ இந்த நாணய கொள்கை கூட்டத்திலும் ரெப்போ விகிதத்தைக் குறைக்காமல் வைத்திருந்தால் தொடர்ந்து 8வது முறையாக ரெப்போ விகிதம் மாற்றமின்றி இருக்கும். இதன் மூலம் 16 மாதங்களாக இந்தியாவில் வட்டி விகிதம் மாற்றம் இருக்காது. ஆனால் உலக நாடுகள் கடந்த ஒரு வாரத்தில் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அடுத்தடுத்து குறைத்து வருகிறது.
Bank of Canada: கனடா மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) குறைத்து 4.75 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவே முதல் வட்டி விகிதக் குறைப்பு ஆகும். மேலும், பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வந்தால், மேலும் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்று கனடா ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இரண்டு தசாப்தத்தில் அதிகப்படியாக 5 சதவீதம் என்ற உயர்ந்த வட்டி விகிதத்தைக் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக நடைமுறையில் இருந்த வேளையில், பணவீக்கத்தின் அடிப்படை காரணிகள் மேம்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளதாகக் கனடா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த முடிவைத் தொடர்ந்து, கனடா நாணயத்தின் மதிப்பு குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராகக் கனடா டாலர் 0.4 சதவீதம் வலுவிழந்து 1.3733 என்ற விகிதத்தில் இருந்தது.
ஸ்வீடன் மற்றும் சுவிஸ்: கனடா மத்திய வங்கி-க்கு முன்னதாக சுவீடன் நாட்டின் மத்திய வங்கியான Riksbank மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் மத்திய வங்கியான Swiss National Bank ஆகியவை தங்களது வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.
European Central Bank: ஐரோப்பிய மத்திய வங்கி, தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இதன் மூலம், 2022 அக்டோபரில் உயர்த்தப்பட்ட 4% என்ற வரலாற்று உச்ச வட்டி விகிதத்திலிருந்து 3.75% ஆக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுக் கடன் வாங்குபவர்கள், சேமிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என பலதரப்பட்ட மக்களைப் பல வகையில் குறறிப்படத்தக்க அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு இந்த வட்டி விகித குறைப்பு சாதகமானது, அதுவே சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு பெரும் இழப்பு.


Click it and Unblock the Notifications