அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப் கனடா நாட்டு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 25 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய வர்த்தகப் போரை உண்டாக்கும் என தெரிய வந்துள்ளது.
கனடா நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் மெலானியா ஜோலி, டிரம்ப் தங்கள் நாட்டுப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதித்தால் இரு நாடுகளுக்கு இடையே இத்தனை ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வர்த்தகப் போர் உண்டாகும் என தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனடா நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஜோலி, டிரம்ப் நிர்வாகம் தங்கள் நாட்டுப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்தால் நாங்கள் பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது வரியை உயர்த்துவோம் என்றும் இந்த வர்த்தகப் போரை அமெரிக்கா தான் தொடங்கி வைக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இருநாட்டு வர்த்தக உறவை பாதிக்கும் வகையில் டிரம்ப் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையை எடுத்தாலும் அதற்கு தக்க பதிலடி கொடுக்க கனடா தயாராக இருக்கிறது என அவர் கூறியுள்ளார். இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அளவிலான வர்த்தக போருக்கு வித்திடு.ம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், டிரம்ப் நிர்வாகம் தங்கள் நாட்டின் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு தக்க பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
வர்த்தகப் போரை தவிர்க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம் ஆனால் டிரம்ப் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கை எடுத்தாலும் அதனை வலுவாக நாங்கள் எதிர்கொள்வோம் என கூறியுள்ளார். அமெரிக்காவில் இருந்து கனடாவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் உள்ளிட்ட பொருட்களுக்கு நாங்கள் கடுமையான வரியை விதிப்போம் என அவர் கூறியுள்ளார்.
கனடா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு என்பது 3.6 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது . அமெரிக்காவை சேர்ந்த 36 மாநிலங்களுக்கு மிகப்பெரிய அளவிலான ஏற்றுமதி மையமாக கனடா தான் செயல்பட்டு வருகிறது. எனவே இருநாட்டு வர்த்தக உறவையும் பாதிக்க கூடிய வகையில் எந்த ஒரு நடவடிக்கை எடுத்தாலும் அது இரு நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
குறிப்பாக கனடாவின் ஜிடிபி இதனால் பாதிப்பை சந்திக்கும் எனவும், அங்கே பணவீக்க விகிதம் அதிகரித்து வேலைவாய்ப்பின்மை உயரும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் தான் கனடா அரசு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத வகையில் அழுத்தம் கொடுப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications