இந்தியா - கனடா மத்தியிலான நட்புறவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டால் அதிகப்படியான பாதிப்பு இந்திய ஐடி நிறுவனங்களுக்கு தான் என்றால் மிகையில்லை, இதற்கு பல காரணங்கள் உண்டு. பொதுவாக இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான வருமானம், லாபம் பெற முக்கியமான காரணம் அதிகப்படியான வெளிநாட்டு வர்த்தகம் வைத்திருப்பது தான்.
இந்தியாவில் இருக்கும் டாப் 5 பெரிய ஐடி சேவை நிறுவனங்கள் பொருத்த வரையில் 90 முதல் 95 சதவீதம் வருமானத்தை வெளிநாட்டு வர்த்தகத்தில் இருந்து தான் பெறுகிறது. இப்படியிருக்கையில் இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் மொத்த வருவாயில் கனடா பகுதியில் இருந்து மட்டுமே 5 முதல் 6 சதவீத வருமானத்தை பெற்று வருகிறது.

இதேவிட முக்கியமாக கடந்த சில வருடங்களில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் கனடாவில் அலுவலகத்தை விரிவாக்கம் செய்து அதிகப்படியான இந்திய மற்றும் கனடா நாட்டவர்களை பணியில் அமர்த்தியுள்ளது.
இது அனைத்தும் தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது, இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் இப்போது தான் அமெரிக்க சந்தை பிரச்சனையில் இருந்து வெளி வந்த நிலையில் தற்போது அதன் அண்டை நாடான கனடாவில் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.
வட அமெரிக்கா டெக்னாலஜி கவுன்சில் மற்றும் கனடா டெக் நெட்வொர்க் அமைப்பின் தரவுகள் படி கனடாவில் மிகப்பெரிய தொழில்நுட்ப ஊழியர்கள் குழுவாக இந்தியர்கள் உள்ளனர். 2023 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 15000 டெக் ஊழியர்கள் கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர் என கூறுகிறது.
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் அதிபராக இருந்த போது விசாவில் அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்த போது, அமெரிக்காவில் விசா கிடைக்காதவர்கள், அமெரிக்காவில் செட்டிலாக வேண்டும் என திட்டமிடுவோர்கள் என பெரும்பாலான டெக் ஊழியர்களும் கனடாவுக்கு குடிபெயர்ந்தனர். இதனால் கடந்த சில வருடத்தில் கனடாவில் டெக் ஊழியர்கள் எண்ணிக்கை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துள்ளது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் கனடாவில் இருந்து அடுத்த சில காலத்திற்கு இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் புதிய திட்டத்தை ஏதும் பெற முடியாது என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ள நிலையில், தற்போது கிடைத்து வரும் 5- 6 சதவீத வருவாய்க்கு பாதிப்பு ஏற்பட்டால் ஐடி ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதை விட முக்கியமாக கனடாவுக்கு செல்ல காத்திருக்கும் இந்திய ஐடி ஊழியர்களின் நிலை என்ன..? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications