கனடா: கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பல இந்தியர்கள் பின்னாளில் நிரந்தர குடியுரிமை பெற்று அங்கேயே செட்டிலாகிவிடுகின்றனர். அப்படி பெரும்பாலான இந்தியர்களின் விருப்பமான நாடாக இருப்பது கனடா தான். இந்நிலையில் நிரந்தர குடியுரிமை கோருபவர்களுக்கு வழங்கிய ஒரு சலுகையை கனடா அரசு ரத்து செய்துள்ளது.
வெளிநாட்டவர்கள் நிரந்தர குடியுரிமை கேட்டு செய்யும் விண்ணப்பங்களில் கனடா அரசு குறிப்பிட்ட சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது கனடாவில் செட்டிலாகி விட வேண்டும் என நினைக்கும் இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என கனடா அரசு தெரிவித்துள்ளது.

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்ற நடைமுறை அமலில் இருக்கிறது. இவ்வாறு நிரந்தர குடியுரிமைக்காக எக்ஸ்பிரஸ் என்ட்ரி மூலம் விண்ணப்பம் செய்பவர்களில் இந்தியர்களே முன்னிலையில் இருக்கின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் 52,000 இந்தியர்கள் எக்ஸ்பிரஸ் என்ட்ரி மூலம் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பம் செய்துள்ளனர். இது அந்த ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் 47 சதவீதம் ஆகும்.
பொதுவாக எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையில் கனடாவில் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் அவர்களுடைய கல்வி ,கனடாவில் அவர்களுக்கு கிடைத்திருக்கும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட தகவல்களை உள்ளிட வேண்டும்.
இவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பீடுகள் வழங்கப்பட்டு அந்த கூடுதல் மதிப்பீடுகள் மூலம் அவர்களுக்கு எளிமையாக குடியுரிமை கிடைத்து விடும். அந்த வகையில் கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையில் விண்ணப்பம் செய்பவர்களுக்கு அந்த வேலை பார்க்கக் கூடிய நிறுவனம் அளித்திருக்கும் நியமன கடிதத்திற்காக 50 இல் இருந்து 200 புள்ளிகள் வரை மதிப்பீடுகளாக கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஜனவரி மாதத்தில் இருந்து இந்த நியமன கடிதத்திற்கான மதிப்பீடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என கனடா அரசு கூறியுள்ளது. ஏற்கனவே குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்கள் மற்றும் காத்திருப்போருக்கு இது பொருந்தாது என கன்னட அரசு தெரிவித்துள்ளது.
பலரும் போலியான உத்தரவு கடிதங்கள் வாயிலாக விண்ணப்பம் செய்து மோசடியாக கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதாக புகார்கள் வந்ததை அடுத்து பணி உத்தரவு கடிதங்களுக்கான மதிப்பீடு வழங்குவதை நிறுத்தி இருப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.
இது ஒரு தற்காலிக முடிவு தான் என தெரிவித்திருக்கும் கன்னட அரசு எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையில் நிரந்தர குடியுரிமை பெறுவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications