ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு அதிகரித்ததில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் தான் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர். அதிலும் குறிப்பாக சிறுவர்கள் தொடர்ந்து சமூக ஊடக தளங்களுக்கு அடிக்ட் ஆகி வருகின்றனர். இதனால் அவர்களுடைய மனநிலை பாதிப்பதாக பல ஆய்வுகள் குறிப்பிடுகிறது. இதையடுத்து கனடா அரசு சிறுவர்களின் பாதுகாப்பிற்காக ஒரு புதிய சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது.
அதன்படி 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சோசியல் மீடியா தளங்களை பயன்படுத்த தடை விதிக்கவுள்ளது. ஆனால் இது எல்லா ஆப்-களுக்கும் கிடையாது. எந்தெந்த ஆப் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றுகிறதோ? அந்தந்த ஆப்-களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா இந்த தடையை முதன் முதலாக அமல்படுத்தியது. அதை தொடர்ந்து கனடா அரசும் இந்த சட்டத்தைக் கொண்டு வர நடடிக்கை எடுத்து வருகிறது.
சோசியல் மீடியா தளங்கள் மட்டுமின்றி.. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்படும் AI சாட்பாட்-களையும் பாதுகாப்பானதாக மாற்ற கனடா அரசு ஒரு புதிய அமைப்பை உருவாக்கி வருகிறது. இந்த அமைப்பு நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் சாட்பாட்களை உருவாக்குகிறதா? என்பதை கண்காணிக்கும். அப்படி அரசு விதிகளை மதிக்காமல் செயல்படும் நிறுவனங்களுக்கு அதிக அளவில் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விதிமுறையை மீறி பாதுகாப்பற்ற முறையில் குழந்தைகள் பயன்படுத்தும் சாட்பாட்களை உருவாக்கினால் அந்த நிறுவனங்களுக்கு 1 கோடி கனேடிய டாலர் அபராதம் விதிக்கப்படும். அதாவது 72 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் அல்லது அந்த நிறுவனத்தின் உலகளாவிய வருமானத்தில் 3 சதவீதம் அபராதமாக கேட்கப்படும். இந்த இரண்டில் எந்த தொகை அதிகமாக இருக்கிறதோ, அதுவே அபராதமாக விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய அமைச்சர் மார்க் மில்லர் இந்த மசோதாவின் நன்மையைப் பற்றி கூறியுள்ளார். சமூக ஊடக தளங்களும் சரி.. AI சாட்பாட்களும் சரி குழந்தைகளின் கவனத்தை வெகுவாக கவர்கின்றன. இவை அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். இதனால் வளர வளர மனக்கவலை, தனிமை, மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கு தள்ளப்படுவார்கள்.
இந்தச் சட்டம் வந்தால் கண்டிப்பாக இளம் கனேடியர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழல் கிடைக்கும். அதோடு அவர்கள் பிற மனிதர்களை நேரில் சந்தித்து பேசி, நட்பை வளர்த்து, பள்ளியில் கவனம் செலுத்தவும் உதவியாக இருக்கும், என்று கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை தடை செய்த முதல் நாடாக மாறியது. இந்தச் சட்டம் ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட்டதும், அங்கிருக்கும் சமூக ஊடக நிறுவனங்கள் கிட்டத்தட்ட 5 மில்லியன் சிறுவர்களின் அக்கவுண்ட்டை முடக்கியது.
ஆனால் இந்த சட்டம் முறையாக அமல்படுத்தப்பட இன்னும் ஒரு வருடம் வரை ஆகலாம் என்று கனடா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும் புதிய டிஜிட்டல் அமைப்புகளை மாற்றியமைப்பதற்கு மேலும் 18 மாதங்கள் வரை ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர், அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு இணங்க செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இணைய வசதியை வழங்க முடியும் என்று கூறியுள்ளார். ஆனால் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றை கொண்டிருக்கும் மெட்டா மற்றும் எலான் மஸ்கின் எக்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த சட்டம் தொடர்பாக எந்த பதிலும் அளிக்கவில்லை. கனடாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் பிரான்ஸ், போலாந்து ஆகிய நாடுகளும் இந்த விதிகளை கடுமையாக்க முயற்சித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications