இந்தியாவில் விமானங்களில் பயணம் செய்யக்கூடிய மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது . மத்திய அரசு அதற்கேற்ற வகையில் பல்வேறு நகரங்களுக்கு இடையிலான விமான இணைப்பை அதிகப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறது.
நீண்ட காலமாக விமானங்களில் பயணம் செய்பவர்கள் முன்வைத்த ஒரு கோரிக்கையை ஏற்று டிஜிசிஏ எனப்படும் விமான போக்குவரத்து துறை ஆணையம் ஒரு புதிய நடைமுறையை கொண்டு வர முடிவு செய்திருக்கிறது. வழக்கமாக நாம் விமானங்களில் பயணம் செய்ய டிக்கெட் சம்பந்தப்பட்ட விமான சேவை வழங்கும் நிறுவனத்தின் இணையதளம் அல்லது செயலி அல்லது டிக்கெட் விற்பனைக்கான மூன்றாம் தரப்பு செயலிகள் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்கிறோம். திடீரென நம்முடைய திட்டம் மாறுகிறது என்றால் நாம் அந்த விமான டிக்கெட்டை ரத்து செய்யும்போது முழுமையான தொகை நமக்கு கிடைப்பது கிடையாது.

தற்போது அதில் தான் டிஜிசிஏ மாற்றம் கொண்டுவர பரிந்துரை செய்திருக்கிறது. டிஜிசிஏ-வின் புதிய வரைவு விதிகளின்படி முன் பதிவு செய்த அடுத்த 48 மணி நேரத்திற்குள் டிக்கெட் பரிசீலனை என்ற ஒரு ஆப்ஷனை விமான நிறுவனங்கள் வழங்க வேண்டும் என கூறி இருக்கிறது. இந்த 48 மணி நேரத்தில் பயணிகள் தங்களுடைய டிக்கெட்டை எந்த வித கூடுதல் கட்டணமும் இல்லாமல் ரத்து செய்யவோ அல்லது மாற்றி அமைக்கவோ முடியும் .
48 மணி நேரத்திற்குள் பயணிகள் அந்த டிக்கெட்டை ரத்து செய்யலாம் அல்லது வேறு தேதியில் விமான பயணத்தை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பினை வழங்க வேண்டும் . நீங்கள் வேறு தேதியில் விமான பயணத்தை மாற்றுகிறீர்கள் என்றால் மாற்றப்பட்ட விமானத்திற்கான அன்றைய கட்டணம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் முழு தொகையும் வழங்க வேண்டும் என கூறியுள்ளது.
உள்நாட்டு விமான பயணமாக இருந்தால் முன்பதிவு செய்த தேதியில் இருந்து ஐந்து நாட்களுக்குள் புறப்படும் விமானங்களுக்கும் , சர்வதேச விமான பயணமாக இருந்தால் 15 நாட்களுக்குள் புறப்படும் விமானங்களுக்கும் இந்த வசதி பொருந்தாது என தெரிவித்துள்ளது. மேலும் விமான சேவை வழங்கக்கூடிய நிறுவனத்தின் இணையதளம் வழியாக நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். மூன்றாம் தரப்பு செயலி அல்லது இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தால் இந்த சலுகை கிடைக்காது.
இவ்வாறு ஒரு பயணி டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு 48 மணி நேரத்துக்குள் அதனை ரத்து செய்துவிட்டார் எனும் போது அடுத்த 21 நாட்களுக்குள் அந்த பணத்தை விமான நிறுவனங்கள் திரும்ப வழங்கி விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரை மீது நவம்பர் 30ஆம் தேதி வரை கருத்துக்களை தெரிவிக்கலாம் அதன்பிறகு இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முடிவினை டிஜிசிஏ அறிவிக்கும்.


Click it and Unblock the Notifications