பெங்களூரு: பெங்களூரு மாநகரில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. பல இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கிறது சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்து இருக்கிறது.
பெங்களூர் மாநகராட்சி சரியாக செயல்படாததே இதற்கு காரணம் என பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த சூழலில் பலரும் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதையும் பெங்களூர் மாநகரில் மழை நீர் தேங்கி கடும் நெரிசல் ஏற்பட்டிருப்பதையும் ஒப்பிட்டுள்ளனர். இதற்கு பதிலளித்திருக்கும் பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர் மகேஸ்வர் ராவ் பெங்களூரும் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியும் ஒன்று கிடையாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

பெங்களூருவையும் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியையும் நாம் ஒப்பிடவே முடியாது அங்கு இருக்கும் மக்கள் தொகை வேறு இங்கே இருக்கும் மக்கள் தொகை வேறு அந்த பகுதியின் பரப்பளவு வேறு இந்த பகுதியின் பரப்பளவு வேறு என தெரிவித்திருக்கிறார். முன்னதாக பயோகான் நிறுவனத்தின் தலைவரான மசூம்தர் ஷா, எலக்ட்ரானிக் சிட்டியை நிர்வகித்து வரும் அமைப்பிடம் பெங்களூரு நகரின் அனைத்து மேலாண்மை பணிகளையும் வழங்கி விட வேண்டும். ஏனெனில் அந்த அமைப்பு நிர்வகிக்கும் பகுதிகளில் எல்லாம் வாழ்க்கை தரம் சிறப்பாக இருக்கிறது என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாக ஆணையர் மகேஸ்வர் ராவ் பெங்களூரு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தை யார் பரிந்துரை செய்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் பெங்களூரு நகரத்தையும் எலக்ட்ரானிக் சிட்டி நகரத்தையும் நம்மால் ஒப்பிட முடியாது அதன் அளவு என்ன இதன் அளவு என்ன அந்த நகருக்கு இருக்கும் பிரச்சினைகள் என்ன இந்த நகரத்தில் இருக்கும் சிக்கல்கள் என்ன என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
பெங்களூரு மாநகரம் 14 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரம் என்றும் அவர் கூறியிருக்கிறார். எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் மிகச்சிறந்த பணியை செய்து இருக்கிறார்கள் அதை கண்டு அவர்களின் முயற்சியை நாங்களும் பெங்களூரு நகருக்குள் கொண்டு வர இருக்கிறோம் என கூறியுள்ளார்.
பெங்களூரு நகரம் 65 லிருந்து 70 மில்லி மீட்டர் வரையிலான மழையை தாங்கக்கூடிய திறன் கொண்டது ஆனால் ஒரே நாளில் இங்கே 104 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. அதனால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என கூறி இருக்கிறார்கள். முன்னதாக அவர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டார்.


Click it and Unblock the Notifications