பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி ஜிஎஸ்டி கவுன்சில் தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விதிகள் குறைக்கப்பட்டு இந்திய மக்கள் கையில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உபரி நிதியைக் கொடுக்கப்பட்ட நிலையில், பல கோடி மக்கள் கடந்த 10 நாட்களில் டிவி, பிரிட்ஜ், கார், பைக் என வாங்கி குவித்துள்ளனர்.
ஜிஎஸ்டி வரி குறைப்பால் பல பொருட்களின் விலை குறைந்துள்ளது, இதேவேளையில் பண்டிகை கால விற்பனையும் துவங்கியிருக்கும் காரணத்தால் நாடு முழுவதும் வர்த்தகம் சூடுபிடித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் 2வது தீபாவளி பரிசு வழங்க ஆர்பிஐ களத்தில் குதித்துள்ளது.

ஆம், இந்திய ரிசர்வ் வங்கியின் இரு நாள் நாணய கொள்கை கூட்டம் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கியுள்ளது. இக்கூட்டத்தின் முடிவுகள் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பில் தீபாவளி பரிசாக ஆர்பிஐ ரெப்போ விகிதத்தைக் குறைத்து நாட்டு மக்களுக்கு 2வது தீபாவளி பரிசு வழங்கலாம் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இதற்கு ஏற்றார்போல் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் சமீபத்தில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப் பல முக்கியமான சூழ்நிலைக்கு மத்தியில் தான் 2 மாத நாணய கொள்கை கூட்டத்தை ஆர்பிஐ துவங்கியுள்ளது.
இக்கூட்டத்தின் முடிவு புதன்கிழமை வெளியிட உள்ள நிலையில், பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள் ரெப்போ விகிதத்தை 5.50 சதவீதமாகவே வைத்திருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கும் வேளையில், சிலர் மட்டும் ஆர்பிஐ சர்ப்ரைஸாக வட்டி விகிதத்தைக் குறைக்கும் என தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் வட்டிக் குறைப்பு, வரி விதிப்பு, வர்த்தக பாதிப்பு மற்றும் பணவீக்கத்தைக் குறைக்கும் பொருட்டு இந்த முறை ஆர்பிஐ கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாகச் சிட்டி, பார்க்லேஸ், எஸ்பிஐ, கேப்பிடல் எக்னாமிக்ஸ் ஆகியவை இந்தியாவில் அதிகரிக்க இருக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி குறைப்பு கட்டாயம் இருக்கும் என அடித்துக் கூறுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து ரெப்போ விகிதத்தை 1 சதவீதம் முழுமையாகக் குறைத்துள்ளது, ஆனாலும் தனியார் துறை முதலீடுகள் அதிகரிக்காமல் இருப்பது மற்றொரு முக்கிய பிரச்சனையாகப் பொருளாதார வல்லுனர்கள் பார்க்கின்றனர்.
இவை அனைத்தும் தான் ஆர்பிஐ தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்தி ரெப்போ விகிதத்தை குறைக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணிக்கப்பட்ட படி ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தைக் குறைத்துவிட்டால் கார், பைக், வீடு கடனுக்கான ஈஎம்ஐ குறையும்.
இதேபோல் புதிதாக வாங்கப்படும் அனைத்து விதமான வங்கி கடனுக்கான வட்டி விகிதம் குறையும், இவை அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய படியாக இருக்கும். மேலும் இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டில் கணித்ததை காட்டிலும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இக்காலகட்டத்தில் ஆர்பிஐ சுமார் 7.8 சதவீதம் வரையிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இந்த நிலையில் ஜிஎஸ்டி குறைப்புடன், ரெப்போ விகித குறைப்பும் சேர்ந்தால் நாட்டின் அனைத்து துறையும் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications