சொந்தமாக கார் வாங்குவது என்பது 5 வருடத்திற்கு முன்பு ஒரு ஆடம்பரமான விஷயமாக இருந்தது, ஆனால் கொரோனா தொற்றுக்கு பின்பும், ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுக்கு பின்பு மக்கள் மத்தியில் கார் என்பது அத்தியாவசியமான ஒரு விஷயமாக மாறியுள்ளது.
கடந்த 5 வருடத்தில் முதல் முறை கார் வாங்கியோர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்றால் மிகையில்லை. இதேபோல் இந்தியாவில் ஆடம்பர கார்களுக்கும், பிரீமியம் கார்களுக்குமான சந்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்துள்ளது.

இதனால் இந்தியாவில் ப்ரீமியம் கார்களை அறிமுகம் செய்ய தயக்கம் காட்டி வந்த பல முன்னணி நிறுவனங்கள், தற்போது ஆர்வமாக அடுத்தடுத்து ப்ரீமியம் கார்களை அறிமுகம் செய்து வருகிறது. இதேபோல் ஆடம்பர கார் நிறுவனங்களும் தற்போது இந்தியாவை முக்கிய வர்த்தக சந்தையாக பார்க்கும் நிலையில் புதிய மாடல் கார்களை எப்போதும் இல்லாத வகையில் குறைந்த காலக்கட்டத்திலேயே இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
சொல்லப்போனால் அடுத்த 5 வருடத்தில் வெளிநாட்டில் புதிய கார் அறிமுகம் செய்யும் அதே நாளில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யும் நிலை வரலாம். காரணம் இந்தியாவில் ஆடம்பர கார்களை வாங்குவோர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது, குறிப்பாக பட்ஜெட் பிரிவில் எப்படி முதல் கார்களை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோ, இதேபோல் முதல் ஆடம்பர கார் வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆடம்பர கார்களின் விலை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்தும் இந்திய மக்கள் இதை வாங்குகிறார்கள் என்பது தான். ஆடம்பர கார்கள் 90 சதவீதம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில் டாலர் மதிப்பு உயர்வால் இதன் விலை 5 வருட உச்சத்தை தொட்டு உள்ளது.

ஆடம்பர கார்களின் சராசரி விலை கடந்த 5 வருடத்தை காட்டிலும் இந்த வருடம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. மெர்சிடீஸ் பென்ஸ், BMW, ஆடி, வால்வோ, ஜாகுவார், லேண்ட் ரோவர், மினி போன்ற பல முன்னணி ஆடம்பர பிராண்டுகளின் கார்களின் விலை 2018 நிலவரத்தை ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டின் முதல் 4 மாதத்தில் மட்டுமே 38 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய ஆடம்பர கார் விற்பனை சந்தையில் மெர்சிடீஸ் பெனஸ் நிறுவனம் தான் ராஜா.
2018 உச்ச ஆடம்பர கார் விற்பனை அளவீட்டை 2023ல் தொடவில்லை என்றாலும் முதல் முறை ஆடம்பர கார்களை வாங்குவோர் எண்ணிக்கை சுருக்கமாக புது பணக்காரர்கள் ஆடம்பர கார்களை வாங்கும் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.
2018 மற்றும் 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் லேண்டு ரோவர் கார் மாடல் விலை சராசரியாக 85.69 லட்சத்தில் இருந்து தற்போது 1.36 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ஆடி பிராண்டின் கார்களின் விலை 63 லட்சத்தில் இருந்து 65 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 2028ல் அதிகப்படியாக 40,340 ஆடம்பர கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 2022ல் 35,588 கார்களும், 2021ல் 27,020 ஆடம்பர கார்களும் விற்பனையாகியுள்ளது. இதேவேளையில் மெர்சிடீஸ் பென்ஸ் மற்றும் BMW தனது வரலாற்று விற்பனை சாதனையை 2022ல் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடம்பர கார்களின் விலை கடந்த 5 வருடத்தை காட்டிலும் இந்த வருடம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications