பொதுவாக படித்து முடித்து ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது என்றால் அந்த வேலையின் முதல் நாள் நம் அனைவருக்கும் அச்சம், ஆர்வம் என அனைத்து உணர்வுகளும் கலந்த ஒரு நாளாக இருக்கும். முதல் நாள் சரியான நேரத்திற்கு பணிக்கு சென்று விட வேண்டும் என்று தான் நாம் அனைவரும் விரும்புவோம்.
ஆனால் 1997 முதல் 2012 ஆம் ஆண்டுக்குள் பிறந்த ஜென் ஸீ (Gen Z) தலைமுறையினர் முதல் நாள் அன்று வேலைக்கு செல்ல மாட்டார்களாம். அவர்களிடையே இது ஒரு ட்ரெண்டாக இருப்பது ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

CVGenius என்ற ஒரு ஆன்லைன் ரெஸ்யூம் தளம் ஜென் ஸீ ஊழியர்கள் மத்தியில் ஒரு சர்வே நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி தற்போது 27 வயதுக்குள் இருக்கக்கூடிய ஜென் ஸீ தலைமுறையினர் ஒரு பெரிய நிறுவனமோ அல்லது சிறிய நிறுவனமோ எங்கு தங்களுக்கு வேலை கிடைத்தாலும் முதல் நாள் வேலைக்கு செல்ல மாட்டார்களாம். முதல் நாள் நான் வேலைக்கு வரமாட்டேன் என அந்த நிறுவனத்திடமும் அவர்கள் தெரிவிக்க மாட்டார்களாம். ஏனெனில் ஜென் ஸீ தலைமுறையினர் தங்களுடைய சுதந்திரத்தை தான் முன்னிலைப்படுத்துகிறார்கள்.
முதல் நாள் பணிக்கு செல்வதும் செல்லாமல் இருப்பதும் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரம் என 34 சதவீதம் பேர் பதில் தெரிவித்திருக்கிறார்களாம். இதற்கு காரணமாக அவர்கள் கூறுவது ஒரு வேலையைத் தேடி அதற்கு விண்ணப்பம் செய்து பல்வேறு நேர்காணல்களை எதிர்கொண்டு, பின்னர் அவர்கள் பதிலளிக்க தாமதப்படுத்தி இத்தனை காலம் நாங்கள் காத்திருக்கிறோம், எனவே அந்த வெறுப்பை காட்டுவதற்கு நாங்கள் இந்த முதல் நாள் பணிக்கு செல்லாமல் தவிர்த்து விடுகிறோம் என பதிலளித்துள்ளனர்.
ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது என்றால் இதற்கு முந்தைய தலைமுறை அதாவது ஜென் எக்ஸ் தலைமுறையினர் மற்றும் பேபி பூமர் உள்ளிட்ட தலைமுறையை சேர்ந்தவர்கள் எல்லாம் நிறுவனத்திற்கு சரியான நேரத்திற்கு வரவேண்டும், வேலை செய்ய வேண்டும், நிறுவனம் வளர்ச்சி அடைந்தால் தான் நாமும் வளர்ச்சி அடைய முடியும் என்பன உள்ளிட்ட பண்புகளைக் கொண்டிருந்தனர். ஆனால் ஜென் ஸீ தலைமுறையினரை பொருத்தவரை அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்களாம்.
குறிப்பாக நிறுவனத்தின் வளர்ச்சி என பாராமல் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு அடுத்தடுத்த நிறுவனங்களுக்கு மாறுவது என இருப்பார்களாம். மேலும் தாங்கள் எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கும் வேலைக்கு மட்டுமே செல்வேன், அதுவரை சும்மாவே இருப்பேன் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications