இந்திய பங்குச்சந்தையில் இது ஐபிஓ காலம் என கூறும் வகையில் பல்வேறு நிறுவனங்களும் ஐபிஓ வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் மிகப்பெரிய ஐடி நிறுவனத்தின் ஐபிஓ வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்லைல் என்ற அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் முதலீட்டு நிறுவனம், இந்தியாவில் செயல்படும் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை 2021ஆம் ஆண்டு வாங்கியது. தற்போது இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய கார்லைல் நிறுவனம் தயாராகி வருகிறது.

ஐபிஓ வெளியிடுவது அல்லது நிறுவனத்தை விற்பது என இரண்டு விருப்பங்களை கார்லைல் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஐடி துறையை சேர்ந்த நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடந்தாலும், ஐபிஓ வெளியீட்டிற்கு தான் முக்கியத்துவம் தரப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இதற்கான ஆவணங்களை தயாரிப்பதற்கான பணிகளும் ஒரு புறம் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஐபிஓ வெளியிடுவதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் ஐபிஓ இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2025இல் வெளியிடப்படும் என தெரிகிறது.
ஐபிஓ வெளியாகும் பட்சத்தில் எல்ஐசிக்கு பிறகு வெளியாகும் மிகப்பெரிய ஐபிஓ-ஆக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. 2022ஆம் ஆண்டு இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமாக இருந்த எல் ஐ சி பங்குகள் ஐபிஓ மூலம் பொதுமக்களுக்கு விற்கப்பட்டன.
ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவன ஐபிஓ, இந்தியாவின் தொழில் நுட்ப துறையே ஆட்டுவிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் 1 பில்லியன் டாலர்கள் திரட்டப்படும் என்றும், ஹெக்ஸாவேர் நிறுவனத்தின் மதிப்பு 4 பில்லியன் டாலர்கள் என எட்டக்கூடும் என்றும் தெரிகிறது.
2021 ஆம் ஆண்டு பேரிங் பிரைவேட் ஈகிவிட்டி ஏசியா நிறுவனத்திடம் இருந்து கார்லைல் நிறுவனம் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸை கைப்பற்றியது. இந்த நிறுவனம் ஐடி துறை மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களின் படி, இதன் ஆண்டு வருவாய் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகம் முழுவதும் 50 இடங்களிலும் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் சுமார் 28 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications