சென்னை: சென்னையை சேர்ந்த புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனமான காஸா கிராண்ட் தன்னுடைய ஊழியர்கள் 1000 பேரை ஸ்பெயினுக்கு சுற்றுலா அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது. profit-share bonanza என்ற திட்டத்தின் கீழ் 1000 ஊழியர்களை இலவசமாக ஸ்பெயினின் பார்சிலோனாவுக்கு ஒரு வார காலம் சுற்றுலா அழைத்து செல்வதாக காஸா கிராண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் வெற்றிக்காக பங்களிப்பு தந்த ஊழியர்களுக்கு பரிசளிக்கும் வகையில் இந்த சுற்றுலா திட்டத்தை ஏற்பாடு செய்திருப்பதாக காஸா கிராண்ட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது . நிறுவனத்தின் கடந்த நிதியாண்டு விற்பனை இலக்கை அடைவதில் முக்கிய பங்காற்றிய ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு மனப்பான்மையை அங்கீகரிப்பதற்காகவே இந்த சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம் என காஸா கிராண்ட் நிறுவனம் கூறியுள்ளது.

அதன்படி தலைமை நிர்வாகி முதலான 1000 ஊழியர்களை ஒன்றிணைத்து ஸ்பெயின் நாட்டின் பாரஸிலோனா நகருக்கு ஒரு வாரம் சுற்றுலா அழைத்து செல்ல இருக்கின்றனர். இந்த சுற்றுலாவுக்கான அனைத்து செலவுகளையும் காஸா கிராண்ட் நிறுவனமே ஏற்றுக் கொள்கிறது. ஸ்பெயின் நாட்டின் கலாச்சாரம் ,வரலாற்று அடையாளங்கள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளை கண்டு அனுபவிக்க இந்த பயணம் அவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் என காஸா கிராண்ட் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நிறுவனம் ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு ஊழியர்களை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா அழைத்து சென்றது. இவ்வாறு ஊழியர்களின் பணிகளை அங்கீகரிக்கும் போது அவர்கள் தங்கள் தங்களை இன்னும் மதிப்புடன் உணர்கிறார்கள் என்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் ஆர்வத்தோடு பணிபுரிகிறார்கள் என்றும் காசா கிராண்ட் நிறுவனம் கூறுகிறது. பல்வேறு துறைகளிலும் இருக்கும் ஊழியர்கள் ஒருங்கிணைத்து இந்த சுற்றுலாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்களாம்.
கடின உழைப்பு தந்து நிறுவனத்தின் விற்பனை டார்கெட்டை எட்டுவதற்கு உதவியாக இருந்த ஊழியர்களையும் தேர்வு செய்து இந்த சுற்றுலாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். 2013 ஆம் ஆண்டில் இருந்தே காசா கிராண்ட் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களை இவ்வாறு தேர்வு செய்து வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்து செல்கிறது.
ஏற்கனவே இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்களை சிங்கப்பூர், தாய்லாந்து ,இலங்கை, துபாய், மலேசியா மற்றும் லண்டன் ஆகிய ஊர்களுக்கு அழைத்து சென்றுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து சென்றதாம்.


Click it and Unblock the Notifications