இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையான யுபிஐ பெரும் வளர்ச்சி அடைந்திருந்தாலும், பொதுமக்களிடம் ரொக்க பணப்புழக்கத்தின் அளவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் மக்கள் மீண்டும் பணத்தை ரொக்கமாக எடுத்து பயன்படுத்தும் முறைக்கே மாறுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வளர்ச்சிக்கு மத்தியிலும் இந்தியாவில் ரொக்க பணப் புழக்கம் 41.8 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தி இந்து நாளிதழில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் பல்வேறு முக்கிய தரவுகள் வெளியாகியுள்ளன. 2026ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி, பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு 41.8 லட்சம் கோடி ரூபாயாக தொட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட சுமார் 13% அதிகமாகும். அதே வேளையில் யுபிஐ பயன்பாடு 17% குறைந்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் UPI வளர்ச்சி விகிதம் கடந்த காலங்களை விட தற்போது சற்று மந்தமடைந்துள்ள அதே வேளையில், ரொக்க பயன்பாடு நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என அந்த செய்தி கூறியுள்ளது. கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் இன்றும் ரொக்க பணத்தை கையில் வைத்திருப்பதை மக்கள் பாதுகாப்பாகவும், அவசர தேவைகளுக்கு அவசியமான ஒன்றாகவும் கருதுகின்றனர் என அந்த செய்தி கூறுகிறது.
தற்போது UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏதுமில்லை. எனினும், எதிர்காலத்தில் Merchant Discount Rate - MDR போன்ற கட்டணங்கள் பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இதனால் சாமானிய மக்களுக்கு எந்த கட்டணமும் இல்லை யுபிஐ இலவசம் தான் ஆனால் பெரிய வணிகர்களுக்கு மட்டுமே அதிகபட்ச பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்படும்.
இருந்தாலும் இது மக்களிடையே ஒருவித தயக்கத்தை உருவாக்கியுள்ளதாகவும், இத்தகைய கட்டணங்கள் விதிக்கப்பட்டால், மக்கள் டிஜிட்டல் முறையை விடுத்து மீண்டும் ரொக்க பயன்பாட்டிற்குத் திரும்ப வாய்ப்புள்ளது என அந்த செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் சர்வர் கோளாறுகள், மின்தடை போன்ற சிக்கல்கள் ஏற்படும் போது, ரொக்க பணம் மட்டுமே கைகொடுக்கும் என்பதால், மக்கள் ஒரு சிறிய தொகையை எப்போதும் கையில் வைத்திருப்பதை உறுதி செய்கின்றனர். எனவே டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்தாலும், இந்தியாவின் மிகப்பெரிய முறைசாரா பொருளாதாரம் இன்றும் ரொக்கத்தையே பெரிதும் நம்பியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ரொக்க பணப் புழக்கத்தின் அதிகரிப்பு, இந்திய பொருளாதாரம் டிஜிட்டல் மற்றும் ரொக்கம் ஆகிய இரண்டின் கலவையுடன் இயங்குவதையே காட்டுகிறது. UPI புரட்சி இந்தியாவை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தியிருந்தாலும், ரொக்க பணம் இன்றும் இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. ரொக்கத்திலிருந்து டிஜிட்டலுக்கு என்ற பயணம் தொடர்ந்து கொண்டிருந்தாலும், மக்கள் பணத்தை கையில் வைத்திருப்பதில் காட்டும் ஆர்வம் குறையவில்லை என்பதையே இந்த 41.8 லட்சம் கோடி ரூபாய் பணப்புழக்க புள்ளிவிவரம் காட்டுகிறது. இது பெரும்பாலும் கிராமப்பகுதிகளில் தான் நடக்கிறது.


Click it and Unblock the Notifications

