இந்தியாவில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு வங்கிகளில் திறக்கப்பட்டுள்ள ஏராளமான போலி வங்கிக் கணக்குகள் தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிபிஐ (மத்திய புலனாய்வுத்துறை) நடத்திய விசாரணையில், சுமார் 8.5 லட்சம் போலி வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு, இவற்றின் மூலம் சைபர் குற்றவாளிகள் தங்களது மோசடி பணத்தை பரிமாறியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த போலி கணக்குகள், மோசடி வழியாக திரட்டப்பட்ட பணங்களை பரிமாற்றம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இது organized crime வடிவத்தில் செயல்படும் சைபர் கும்பல்களின் திட்டமிட்ட செயலாகவும், பல்வேறு மாநிலங்களில் பரவலாக நடந்துகொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த கணக்குகளை திறக்கும்போது கேஒய்சி (KYC) விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பல கணக்குகள், போலி அடையாள ஆவணங்கள் மூலம் திறக்கப்பட்டுள்ளன. இதில், உண்மையான நபருக்கு தெரியாமலும், சில நேரங்களில் அவர்களது ஒத்துழைப்புடனும் கணக்குகள் தொடக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத செயல்களில், இடைத்தரகர்கள், இ-மித்ரா (e-Mitra) முகவர்கள், மற்றும் சில வங்கி ஊழியர்களே நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. பண மோசடி மற்றும் சைபர் குற்றங்களுக்குப் பின்னால் செயல்படும் குழுக்கள், இவ்வகையான கணக்குகளை பண பரிமாற்றத்திற்காக பயன்படுத்தி வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிபிஐ தற்போது பல்வேறு மாநிலங்களில் இந்த போலி கணக்குகள் தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மேலும், சைபர் மோசடிகள் தொடர்பான சிபிஐ விசாரணையில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் போலி வங்கிக் கணக்குகள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, இக்கணக்குகள் மோசடி வழியாக கிடைக்கும் பணத்தை வேகமாகப் பரிமாற்றம் செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. தேவையான அளவு பணத்தை பல வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பிய பின், அந்தக் கணக்குகள் உடனடியாக மூடப்பட்டு விடுகின்றன.
இந்த நடைமுறை காரணமாக, மோசடியின் பிணைப்பை கண்டறிவது சிக்கலாகிறது. குற்றவாளிகளையும் அடையாளம் காணும் முயற்சிகள் பாதிக்கப்படுகின்றன. இது சைபர் குற்ற தடுப்புக்கான நடவடிக்கைகள் எதிர்கொள்ளும் முக்கியமான தடையாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கிகள், அரசு அமைப்புகள் மற்றும் பொது மக்களும், கணக்குத் தொடக்கத்தின் போது விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விசாரணையில் இந்தியாவில் மொத்தம் 700 வங்கிக் கிளைகளில் 8.5 லட்சம் போலிக் கணக்குகளை சைபர் குற்றவாளிகள் தொடங்கி பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது வங்கி தகவல்களை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போலி வங்கிக் கணக்குகள் வழியாக நடைபெறும் மோசடிகளைத் தடுக்கும் முயற்சியின் கீழ், சிபிஐ அண்மையில் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் சோதனைகளை மேற்கொண்டது. இந்த சோதனையின் போது, இடைத்தரகர்கள், வங்கி கணக்குதாரர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் ஏஜெண்டுகள் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள், பண பரிமாற்ற விவரங்கள் மற்றும் ஆதாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம், சைபர் குற்றங்கள் மற்றும் பண மோசடிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் பின்னணி வலையமைப்புகள் மற்றும் தொடர்புகள் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications