சிபிஎஸ்இ-இல் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இதன்படி மாணவர்களுக்கு இரண்டு முறை பொது தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
இரண்டு முறை தேர்வு: சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு ஆணையாளரான சன்யம் பரத்வாஜ் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். வரும் 2026ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை போர்டு தேர்வுகள் நடத்தப்படும். முதல் கட்ட பொது தேர்வு பிப்ரவரி மாதத்திலும் இரண்டாம் கட்ட பொது தேர்வு மே மாதத்திலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிப்ரவரி, மே மாதங்களில் தேர்வு: பிப்ரவரி மாதம் நடக்கக்கூடிய முதல் கட்ட தேர்வில் அனைத்து மாணவர்களும் கட்டாயம் பங்கேற்றுக் கொள்ள வேண்டும், இரண்டாவது கட்டமாக மே மாதம் நடத்தப்படக்கூடிய தேர்வில் மாணவர்கள் விருப்பப்பட்டால் பங்கேற்கலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வு நடத்தும் முறையை கொண்டு வந்திருப்பதாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
புதிய கல்வி கொள்கை : மாணவர்களுக்கு தேர்வு சம்பந்தப்பட்ட அழுத்தங்களை குறைப்பதற்காக ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு தர வேண்டும் என தேசிய கல்விக் கொள்கை பரிந்துரை செய்கிறது. இதனை ஏற்று சிபிஎஸ்இ இப்படி ஒரு அறிவிப்பினை வெளியிட்டு இருப்பதாக சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான கட்டுப்பாட்டு ஆணையாளர் தன்யம் பரத்வாஜ் தெரிவித்திருக்கிறார்.
இரண்டாம் கட்ட தேர்வு கட்டாயமல்ல: பிப்ரவரி மாதம் எழுதக்கூடிய முதல் கட்ட தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளிவரும் என்றும் மே மாதம் எழுதக்கூடிய தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளிவரும் எனவும் தெரிவித்திருக்கிறார். மாணவர்கள் பிப்ரவரி மாதம் எழுதக்கூடிய தேர்வுவில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறவில்லை என எண்ணினால் மே மாதம் நடக்கக்கூடிய தேர்வில் பங்கேற்கலாம் என்றும் ஒரு மாணவர் மூன்று பாடங்கள் வரை இரண்டாவது முறையாக தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார் .
பிப்ரவரி மாத தேர்வு கட்டாயம்: குளிர் பிரதேசங்களில் பயிலும் மாணவர்கள் இந்த இரண்டில் ஏதேனும் ஒரு பொது தேர்வினை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என அவர் அறிவித்திருக்கிறார். இண்டெர்னல் தேர்வுகள் வழக்கம் போல ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார். சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பான வரைவு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு தற்போது இறுதி செய்யப்பட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications